
அமேசான் இந்தியா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது சட்டவிரோதமானது என ஐடி ஊழியர்கள் சங்கம் கூறியிருக்கிறது.
அமேசான் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் பணிபுரிந்துவந்த ஊழியர்களுக்கு அந்நிறுவனம் சமீபத்தில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன்படி, விருப்பத்தின் பேரில் தாமாகவே பணியிலிருந்து விலகலாம். விஎஸ்பி எனும் பெயரில் அந்நிறுவனம் கொண்டுவரும் அந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு விலகினால், அதன் பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும். மற்றவர்களுக்கு வேலை பறிபோகும் என்பதுடன் அந்தப் பலன்களும் கிடைக்காது. இந்தத் திட்டத்தின்கீழ் வேலையைவிட்டு விலக விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அமேசான் இந்தியா அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், அமேசான் இந்தியாவின் இந்நடவடிக்கை அறமற்றது, சட்டவிரோதமானது என ஐடி தொழிலாளர் - ஊழியர் சங்கமான ‘நாஸன்ட் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அவை’ (நைட்ஸ்) விமர்சித்திருக்கிறது. இதுதொடர்பாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் அந்த அமைப்பின் தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா, இதில் இருக்கும் பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
‘தொழில் தகராறு சட்டத்தின்படி (1947), அரசிடம் முறைப்படி முன் அனுமதி பெறாமல், எந்த ஊழியரையும் ஒரு நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடியாது. பணிநீக்கத்துக்கான காரணத்துடன் அதுகுறித்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறையினரிடம் அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். இரு தரப்பினரிடமும் பேசிய பின்னர்தான் பணிநீக்கத்தை அனுமதிப்பதா என சம்பந்தப்பட்ட துறை முடிவு செய்யும்’ எனத் தெரிவித்திருக்கும் ஹர்பிரீத் சிங் சலுஜா, அமேசானின் கொள்கைகளைவிடவும் இந்தியாவின் சட்டம் முக்கியமானது என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறார். தொழில் சரியாக நடக்காத சூழலில்தான் இப்படியான ’லே-ஆஃப்’ நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்கும் என்றும், அமேசான் அப்படியான நிலைமையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.