இந்தியாவில் அமேசான் உணவு டெலிவரி சேவை: டிச.29-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது

இந்தியாவில் அமேசான் உணவு டெலிவரி சேவை: டிச.29-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது

இந்தியாவில் தனது உணவு டெலிவரி சேவையை டிச.29-ம் தேதியோடு நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் உணவு விநியோக சேவைகளை நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிச. 29-ம் தேதி முதல் இந்தியாவில் உணவு விநியோக சேவைகள் நிறுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள தனது உணவக ஒப்பந்ததாரர்களிடம், மே 2020-ல் தொடங்கிய உணவு விநியோக சேவையை டிச. 29-ம் தேதி முதல் நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பெங்களூருவில் சோதனையில் உள்ள உணவு விநியோக சேவையை டிச. 29-ம் தேதி முதல் நிறுத்துவதாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை அமேசான் எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் உணவக ஒப்பந்ததாரர்களுக்காக வெளியிட்டுள்ள அறிவிப்பில், " டிச. 29-ம் தேதிக்குப் பிறகு அமேசான் ஃபுட் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறமாட்டீர்கள். அதுவரை தொடர்ந்து ஆர்டர்களைப் பெறுவீர்கள், அதனை நிறைவேற்றுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளது.

மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அந்தவகையில், அமேசான் நிறுவனம், உயர்கல்வி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் அமேசான் அகாடமியை மூட முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இந்தியாவில் தனது உணவு டெலிவரி சேவையை நிறுத்த அமேசான் தற்போது முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in