`உக்ரைனில் நிரந்தர பங்கர்களால் உயிர் தப்பினோம்’

டெல்லி வந்த தமிழக மாணவர்களின் வியக்கும் அனுபவங்கள்
`உக்ரைனில் நிரந்தர பங்கர்களால் உயிர் தப்பினோம்’

மத்திய அரசின் ’ஆப்ரேஷன் கங்கா’வில் முதல்முறையாக அதிகமான தமிழர்களாக இன்று 136 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவராக தப்பிய மாணவர், உலகப்போர்களினால் உக்ரைனிலுள்ள நிரந்தரப் பங்கர்களால் உயிர்பிழைத்ததாகத் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை துவக்கியது. அப்போது முதல் அங்குள்ள கல்விநிலையங்களில் பயிலும் வெளிநாட்டவர்களும் சிக்கலுக்கு உள்ளாகினர். இதனால், பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் மத்திய விமானப்போக்குவரத்து துறையால், ’ஆப்ரேஷன் கங்கா’ எனும் பெயரில் மீட்பு நடவடிக்கைகள் துவக்கப்பட்டன. இதில், இன்று மாலை வரை சுமார் 1500 இந்தியர்கள் டெல்லிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர். இவர்களில் முதன்முறையாக அதிக அளவில் தமிழக மாணவ, மாணவியர் 136 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களை வரவேற்ற டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல அதிகாரிகள், தமிழகம் செல்லும் விமானங்களில் அனுப்பி வைக்கின்றனர். இன்று போர் நகரங்களாக கீவ் மற்றும் கார்கீவ் நகரங்களிலிருந்த மாணவர்கள் வந்திருந்தனர். போரின் துவக்கம் முதல் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்கள் இவை. இங்குள்ள பங்கர்கள் எனும் பாதாள சுரங்க அறைகளில் தங்கியிருந்த பலரது அனுபவங்கள் திரைப்படங்களை மிஞ்சும் திகில் அனுபவங்களாக உள்ளன.

இது குறித்து ‘காமதேனு’ இணையத்திடம் தாரஸ்செசன்கோவ் தேசிய அரசு மருத்துவப் பல்கலைகழகத்தின் நான்காம் ஆண்டு பயிலும் திருச்சி மாணவர் கணேஷ் கூறும்போது, ‘உலகப்போர்களுக்கு பின் உக்ரைனில் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் பங்கர்களுடன் அமைக்கப்பட்டது இப்போதுதான் தெரிந்தது. கடந்த நான்கு வருடங்களாக இந்த பங்கர்களை எங்களில் பலரும் பார்த்ததில்லை. உண்மையில் இதன் பலனாகவே உக்ரைனின் பல லட்சம் பொதுமக்களும் அந்த பங்கர்களில் பதுங்கி தப்பினர். நாங்கள் பயிலும் பல்கலைகழகத்திலும் பெரிய அளவிலானப் பல பங்கர்கள் உள்ளன.

மற்ற நாட்களில் இந்த பங்கர்கள் சேமிப்புக்கிடங்குகளாகப் பயன்பட்டு வந்துள்ளன. இருப்பினும் அவைகளில் அதிக வெற்றிடம் இருக்கும் வகையில் பராமரிக்கப்படுகின்றன. இந்த பங்கர்களால் தான் பலரும் உயிர் தப்ப முடிந்தது. இதிலிருந்து உடனடியாக வெளியேறும் வகையிலும் பல வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுகிழமையின் போர்நிறுத்தத்தில் ஒருபகுதியினர் மட்டுமே வெளியேற்றப்பட்டனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் இன்னும் பங்கர்களில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்தார்.

உக்ரைனில் ஒவ்வொரு முக்கிய மாநிலங்களுக்கு ஒன்றாக ஒரு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் தலைநகரான கீவில் மூன்று மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதன் அருகாமையில் அமைந்த இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் இரண்டு தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த ஐந்தும் உக்ரைனில் மிகவும் பிரபலமானவை என்பதால் அவற்றில் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பயில்கின்றனர்.

நான்கு போர் விமானங்கள்

கடந்த பிப்ரவரி 24 இல் துவங்கிய மீட்புப்பணியில் அன்றாடம் அதிகபட்சமாக மூன்று விமானங்கள் மட்டுமே உக்ரைனிலிருந்து டெல்லி வந்தன. இந்த எண்ணிக்கை நேற்று முதல் எட்டு விமானங்களாக அதிகரிக்கப்பட்டன. இன்று முதன்முறையாகப் இந்திய விமானப்படையின் போர்விமானங்கள் நான்கும் கூட 780 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தன. இவற்றின் இரண்டு போர் விமானங்களில் தமிழர்கள் 36 பேர் பயணித்திருந்தனர். அருகிலுள்ள உத்தரப்பிரதேசத்தில் அமைந்த காஜியாபாத்தின் கிண்டன் ராணுவ விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் வந்திறங்கின.

வரவேற்கும் தமிழ்நாடு அரசு இல்ல அதிகாரிகள்

இங்கிருந்து அனைவரும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு காத்திருந்த தமிழக அரசின் டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல அதிகாரிகளால் அனைவரும் வரவேற்கப்பட்டனர். இன்று அதன் உள்ளுரை முதன்மை ஆணையர் அத்துல்ய மிஸ்ரா விமானநிலையம் வந்திருந்து தமிழக மாணவர்களின் நலம் விசாரித்திருந்தார். இவர்கள் அனைவருக்கும் சூடான தமிழக வகை பறிமாறப்பட்டு, அடுத்து தமிழகம் செல்லும் விமானங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான செலவுகள் அனைத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அரசால் செய்யப்பட்டு வருகிறது.

மொத்த மாணவர்கள்

இன்று மட்டும் 4 போர் விமானங்கள் உள்ளிட்ட எட்டு விமானங்கள் உக்ரைனிலிருந்து வந்து சேர்ந்துள்ளன. மும்பைக்கும் நேரடியாக இன்று இரண்டு விமானங்கள் வந்திருந்தன. இதில் தமிழக மாணவர்கள் ஆறு பேர் பயணித்திருந்தனர். அவர்களை அங்கிருந்து தமிழக அரசு அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இவற்றையும் சேர்த்து இதுவரை வந்த விமானங்களில் சுமார் 7,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 310 பேர் தம் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

Related Stories

No stories found.