
தை அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, புனித நீராடிய முதியவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடும் மரபு இருக்கிறது. இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தின் இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து உள்ளனர். இந்நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு புனித நீராடும் பகுதியில் ஆழமான பகுதிக்குச் சென்ற முதியவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர், வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன்(61) என்பது தெரியவந்தது. முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த இடத்தில் அவர் கடலில் முழ்கி பலியானது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலில் மூழ்கி பலியான லெட்சுமணன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.