`குளிக்கவும், தங்கவும் கூடாது'- நாளை முதல் 4 நாள்களுக்கு சதுரகிரி யாத்திரை செல்ல அனுமதி

`குளிக்கவும், தங்கவும் கூடாது'- நாளை முதல் 4 நாள்களுக்கு சதுரகிரி யாத்திரை செல்ல அனுமதி

விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி மலையில் நாளை முதல் 4 நாள்களுக்கு யாத்திரை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, மாதத்தில் 8 நாள் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அமாவாசையை ஓட்டி நான்கு நாள்களும், பெளர்ணமியை ஒட்டி நான்கு நாள்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில் நாளை முதல் வரும் 22-ம் தேதிவரை தை அமாவாசையை முன்னிட்டு 4 நாள்களுக்கு சதுரகிரி யாத்திரை செல்லலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் நாளை பிரதோஷ வழிபாடும், 21-ம் தேதி தை அமாவாசை வழிபாடும் நடக்கிறது.

இதனையொட்டி சதுரகிரி யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கரோனா வழிகாட்டலுக்கு உட்பட்டு சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் யாத்திரைக்கு வருவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பத்து வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

யாத்திரைப் பாதைகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் இறங்கிக் குளிக்க அனுமதி இல்லை. காலை 7 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே யாத்திரை செல்லமுடியும். அதற்கு மேல் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் இரவில் கோயிலில் தங்க அனுமதி இல்லை. அதேபோல் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in