நீட் தேர்வில் குளறுபடி: மாணவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

நீட் தேர்வில் குளறுபடி: மாணவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

நீட் தேர்வில் குளறுபடி நடைபெற்றதாக மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், விடைத்தாளை நேரில் ஆய்வு செய்ய அந்த மாணவிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் மாணவி ஜெயசித்ரா. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், “கடந்த ஜூலை  மாதம்  நீட் தேர்வு எழுதி இருந்தேன்.  தேர்வில் மொத்தம் உள்ள  700  கேள்விகளில்  141 கேள்விகளுக்குச் சரியான பதிலைத்  தேர்வு செய்திருந்தேன் . இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விடை குறிப்புகளை வெளியிட்டிருந்தது.  அதன் அடிப்படையில் எனக்கு 564 மதிப்பெண்கள் கிடைக்கும் என நம்பியிருந்தேன். அதே இணையதளத்தில் விடைத்தாளையும் பதிவேற்றம் செய்திருந்தார்கள். அதன்படி எனக்கு 564 மதிப்பெண்கள் கிடைக்கும் என நினைத்தேன்.

ஆனால் கடந்த 7 -ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 48 சதவீதத்துடன் தேர்ச்சி எனத் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தவகையில் பார்த்தாலும் எனக்கு 300 மதிப்பெண்களுக்கு மேல் இருக்க வேண்டும்.  ஆனால் 114 மதிப்பெண் மட்டுமே எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. எனது விடைத்தாளில் குளறுபடி இருப்பதால், அதை நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆய்வின்  முடிவில் வரக்கூடிய மதிப்பெண்ணை எனக்கு முழுமையாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த  நீதிபதி பவானி, சுப்புராயன் அமர்வு, “ மாணவி மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் இந்த தேர்வில் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.  அதில் தேர்ச்சியும்  பெற்றிருக்க வேண்டும் என்பதால், அவரது கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு  மாணவி டெல்லியில் உள்ள நீட் தேர்வு முகமைக்கு நேரடியாகச் சென்று தனது விடைத்தாளை ஆய்வு செய்யலாம்” என அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in