சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு 98.59 கோடி ஒதுக்கீடு!

சென்னை மேயர்  பிரியா
சென்னை மேயர் பிரியாசென்னையில் புதிதாக பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் அமைக்க ரூ.98.59 கோடி ஒதுக்கீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் புதிதாக பூங்காக்கள், விளையாட்டுத்திடல்கள், கடற்பாசி பூங்காக்கள், மயானங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட 42 திட்டங்களுக்கு ரூ.98.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’ சென்னை மாநகராட்சியில், உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்திடும் வகையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தினை அறிவித்து இதனை செயல்படுத்திடும் வகையில் கடந்த 2021-2022-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள், மயானபூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை 2.0 திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் புரதான சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு 98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு திட்ட அனுமதி மற்றும் கண்காணித்தலுக்காக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in