
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியைத் தொடக்கி வைத்தார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஆகிய மூன்று இடங்களில் ஒவ்வொரு ஆண்டும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன்படி, ஜன.15-ல் அவனியாபுரம், ஜன.16-ல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தன.
இதன்தொடர்ச்சியாக உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். கோயில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.
இப்போட்டியில் 1,100 காளைகள் பங்கேற்கின்றன.350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர். முதலிடம் பிடிக்கும் வீரர், காளை உரிமையாளர்ருக்கு கார் பரிசளிக்கப்பட உள்ளது. போட்டியில் வெற்றி வீரர்கள், காளையின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியைக் காண ஏராளமனோர் குவிந்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி தென்மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.