‘ஆசிஷ் மிஸ்ரா அரசியல் செல்வாக்கு மிக்கவர்... சாட்சிகளைக் கலைத்துவிடுவார்!’

‘ஆசிஷ் மிஸ்ரா அரசியல் செல்வாக்கு மிக்கவர்... சாட்சிகளைக் கலைத்துவிடுவார்!’

லக்கிம்பூர் கெரி வழக்கில் ஜாமீன் வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதி கிருஷ்ணா பஹால் தலைமையிலான அமர்வு இன்று (ஜூலை 26) இந்தத் தீர்ப்பை வழங்கியது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரியில் உள்ள டிக்குனியாவில் 2021 அக்டோபர் 3-ல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. ஆனால், அதை அவர் மறுத்தார். சம்பவம் நடந்த தினத்தில், தான் பன்வாரிபூரில் இருந்ததாகவும், அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை வரவேற்க பாஜக தொண்டர்கள் சென்றபோது, அவர்கள் சென்ற மூன்று வாகனங்கள் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், போராட்டக்காரர்கள் பாஜகவினரைத் தடிகளால் தாக்கியதாகவும் கார்களுக்குத் தீவைத்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆசிஷ் மிஸ்ரா கூறியிருந்தார்.

விவசாயிகள் எனும் போர்வையில் செயல்பட்ட சமூக விரோதிகள்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று ஆரம்பத்தில் அவரது தந்தை அஜய் மிஸ்ரா கூறினார். விசாரணைக்காக போலீஸார் சம்மன் அளித்தபோதும் அதை ஆசிஷ் மிஸ்ரா ஏற்கவில்லை. தனது மகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால்தான் போலீஸ் விசாரணைக்குச் செல்லவில்லை என அஜய் மிஸ்ரா கூறியிருந்தார். எனினும், ஆசிஷ் மிஸ்ராவைக் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் வலுத்தன. இதையடுத்து கடந்த அக்டோபர் 9-ல் அவர் கைதுசெய்யப்பட்டார்.

எனினும், 2022 பிப்ரவரி 10-ல் அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை ஜாமீன் வழங்கியது. தேர்தல் நடக்கும் நேரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது. தேர்தல் வெற்றியையொட்டி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ஆசிஷ் மிஸ்ரா தனது ஆட்களுடன் சென்று மிரட்டியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் ஏப்ரல் 22-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததுடன் ஒரு வாரத்துக்குள் அவர் சரணடைய வேண்டும் எனும் காலக்கெடுவையும் விதித்தது. மேலும் அலகாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி அவர் வழக்கு தொடர்ந்தால் நன்கு அலசி ஆராயந்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஆசிஷ் மிஸ்ரா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 15-ல் முடிவுற்ற நிலையில், தீர்ப்பு ஜூலை 26-ம் தேதி (இன்று) வழங்கப்படும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

சம்பவம் நடந்தபோது ஆசிஷ் மிஸ்ரா அங்கு இல்லை என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அந்த வாதத்துக்கு ஆதரவாக 197 பேர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். எனினும், ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை, ‘சம்பவங்களின் என்சைக்ளோபீடியா’வாகக் கருத முடியாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த வழக்கில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என சாட்சிகள் மிரட்டப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கின் சாட்சியான ஹர்தீப் சிங் ஏப்ரல் 12-ல், ராம்பூர் மாவட்டத்தில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார். எனினும், அந்த கும்பலுக்கும் லக்கிம்பூர் கெரி வழக்குக்கும் தொடர்பில்லை என உத்தர பிரதேச போலீஸார் தெரிவித்தனர். அதேபோல், மார்ச் மாதம் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இன்னொரு சாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனவே, ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனில் வெளிவந்தால் சாட்சிகள் கலைக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. அவருக்கு ஜாமீன் மறுத்திருக்கும் அலகாபாத் நீதிமன்றமும், ‘ஆசிஷ் மிஸ்ரா அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் சாட்சிகள் கலைக்கப்படக் கூடும்’ என்று தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

இன்று எப்படியும் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என அவரது வழக்கறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் உடனடியாக மேல் முறையீடு செய்வதற்கு விவசாய அமைப்புகள் தயாராக இருந்தன. இந்நிலையில், அவரது ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in