பள்ளி நிர்வாகத்தை மிரட்டி 50 ஆயிரம் பெற்றதாக புகார்: பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் சங்கீதா. மயிலாடுதுறையில் தனியார் பள்ளியின் விடுதி ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இயற்பியல் ஆசிரியர் சீனிவாசன் என்பவர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தரப்பட்ட புகாரின் அடிப்படையில் சீனிவாசனை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.
ஆனால் அந்த விவகாரத்தில் தொடர்பில்லாத வேறு சில நபர்களையும் இந்த வழக்கில் சேர்த்து விடுவதாக பள்ளி நிர்வாகத்தை காவல் ஆய்வாளர் சங்கீதா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். அப்படி செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்தும் மேலும் சில விவகாரங்களிலும் தஞ்சை சரக டிஐஜி கயல்விழிக்கு புகார்கள் அனுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில் இவற்றை ஆய்வு செய்த பின் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது மெத்தனமாக நடவடிக்கை எடுப்பதாகவும், இது குறித்த பொதுமக்களின் புகாரின் பேரில் இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.