விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களும் சேகரிப்பு!

இயல்புநிலைக்குத் திரும்பிய நஞ்சப்பசத்திரம்
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களும் சேகரிப்பு!

முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழக்கக் காரணமான குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், எம்.ஐ-17வி5 ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. விபத்து நடந்த இடத்திலிருந்து இன்ஜின் உள்ளிட்ட அனைத்து பாகங்களும், சூலூருக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன. சிறிய பாகங்கள் முதலில் அகற்றப்பட்ட நிலையில், இன்ஜின் உள்ளிட்ட பெரிய பாகங்கள் மின்சார வின்ச் மூலம் பெறப்பட்டு, லாரி மூலம் நேற்று சூலூரைச் சென்றடைந்தன.

டிசம்பர் 8-ல், நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் டிச.15-ல் அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து நிகழ்ந்ததையடுத்து, பாதுகாப்புப் படையினரின் தீவிரக் கண்காணிப்பின் கீழ் நஞ்சப்பசத்திரம் பகுதி வந்தது. ஏர் மார்ஷல் மான்வேந்திர சிங் தலைமையில் அங்கு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களைச் சேகரிக்கும் பணிகளும் நடந்தன.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களும் சேகரிக்கப்பட்டுவிட்டதால், அங்கிருந்த ராணுவத்தினரும் வெளியேறியிருக்கின்றனர். இதுவரை அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொண்டிருப்பதால் தடை ஏதும் இன்றி நடமாடும் சூழல் அப்பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி ஏற்கெனவே கிடைத்திருந்த நிலையில், அதை வைத்து ஹெலிகாப்டர் விபத்தின் காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in