‘நேபாளி இந்திய மொழி அல்ல என்று சொல்வதா?’ - கொந்தளித்த கூர்க்கா சமூகத்திடம் மன்னிப்பு கேட்ட மகளிர் அமைப்பு

‘நேபாளி இந்திய மொழி அல்ல என்று சொல்வதா?’ - கொந்தளித்த கூர்க்கா சமூகத்திடம் மன்னிப்பு கேட்ட மகளிர் அமைப்பு

இந்தியாவின் 75-வது சுதந்திர தினமான ’ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டத்தை ஒட்டி, அகில இந்திய பெண்கள் மாநாடு (ஏஐடபுள்யுசி) அமைப்பின் சார்பில் டெல்லியில் கலைநிகழ்ச்சிக்கான போட்டியாளர் தேர்வு நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தின் காலிம்போங்க் மாவட்டத்திலிருந்து இதில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருந்த ஒரு குழுவினரிடம், நேபாளி மொழி தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது.

போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஏஐடபுள்யுசி அமைப்பின் நிர்வாகியான சந்திர பிரபா பண்டே இருந்தார். அப்போது காலிம்போங் கலைக்குழுவினர் நேபாளி மொழியில் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு அவர் அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. நேபாளி இந்திய மொழி அல்ல என்றும், காலிம்போங், டார்ஜிலிங் பகுதி குழுவினர் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியதாக காலிம்போங் கலைக்குழுவினர் தெரிவித்தனர். அவரது கருத்துக்குக் கண்டனமும் தெரிவித்தனர். இந்தச் செய்தி வட கிழக்கு மாநிலங்களிலும் பரவி பெரும் சர்ச்சை வெடித்தது.

ஏனெனில், வட கிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் வாழும் கூர்க்கா சமூகத்தினர் உள்ளிட்ட மக்களால், நேபாளி மொழி பரவலாகப் பேசப்படுகிறது. இந்த மொழி பேசுபவர்கள் உத்தராகண்டிலும் அதிகமாக வாழ்கின்றனர். இந்தியாவில் கூர்க்கா சமூகத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை கோடி பேர் வாழ்கின்றனர். அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலும் ஒரு மொழியாக நேபாளி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அறியாமல் ஏஐடபுள்யுசியின் நிர்வாகி தெரிவித்த கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இது குறித்து கூர்க்கா சமூகச் செயற்பாட்டாளரான டாக்டர் ஆஷிஷ் பிரதான் கூறும்போது, “டெல்லியிலுள்ள ஏஐடபுள்யுசி தலைவருக்கு போன் செய்து எங்கள் கண்டனத்தைத் தெரிவித்தோம். அந்த அமைப்பின் நிர்வாகி கூறிய கருத்து எங்களைக் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகிவிட்டது. காலிம்போங் மற்றும் டார்ஜிலிங் பகுதிவாசிகளின் நீண்டகாலப் போராட்டத்திற்கு பின் நேபாளி மொழி 71-வது திருத்த அட்டவணைப் பட்டியலில் 1992-ல் சேர்க்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்பியான ராஜு பிஸ்தாவும், ஏஐடபுள்யுசியின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். இதற்காக அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இதை ஏற்ற ஏஐடபுள்யுசி அமைப்பினர், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவரான ஷீலா கார்க்டே வெளியிட்ட அறிக்கையில், ‘எங்களது நிர்வாகி நேபாளி மொழி தொடர்பாக வெளிப்படுத்திய அறியாமையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது தவறுக்கு எங்கள் அமைப்பின் அனைவரின் சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பை கூர்க்கா சமூகத்தினரிடம் கோருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in