அடுத்த மழைக் காலத்திற்குள் பெங்களூருவில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடிப்போம்: கர்நாடக அமைச்சர் அதிரடி!

அடுத்த மழைக் காலத்திற்குள் பெங்களூருவில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடிப்போம்: கர்நாடக அமைச்சர் அதிரடி!

பெங்களூருவில் உள்ள ராஜகாலுவேயில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள அனைத்து அடுக்குமாடி கட்டுமானங்களும் இடிக்கப்படும் என கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

ராஜகாலுவே ஆக்கிரமிப்பு குறித்து பேசிய அமைச்சர் ஆர்.அசோக், “அடுத்த மழைக்காலத்துக்குள், நிலுவையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களையும் அகற்ற வேண்டும். நொய்டாவில் நீங்கள் பார்த்தது போல் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளும் அகற்றப்படும். ஆக்கிரமிப்புக்கு அனுமதியளித்த அதிகாரிகள் மற்றும் கட்டடம் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு நகரில் உள்ள ராஜகாலுவேவை 30-40 ஐடி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. எந்த ஒரு பாரபட்சமும் இன்றி இந்த கட்டிடங்கள் இடிக்கப்படும்” என்று கூறினார்.

மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளைச் செய்த ஐடி பூங்காக்கள் மற்றும் டெவலப்பர்களின் பட்டியலில் மகாதேவபுராவில் உள்ள பாக்மனே டெக் பார்க் மற்றும் பூர்வா பாரடைஸ், 3 இடங்களில் உள்ள ஆர்பிடி, தொட்டகண்ணெல்லியில் உள்ள விப்ரோ, பெல்லந்தூரில் உள்ள எக்கோ-ஸ்பேஸ், பல இடங்களில் கோபாலன் மற்றும் ஹூடியில் உள்ள தியா பள்ளி ஆகியவை இடம்பிடித்துள்ளது.

பெங்களூரு வெள்ளம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது என்றும் அமைச்சர் அசோக் கூறினார். சமீபத்திய கணக்கெடுப்பில் பெங்களூரு நகரம் முழுவதும் 980 சட்டவிரோத கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தது. பொது நல வழக்குடன் இணைந்து பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையிலான இந்த ஆய்வறிக்கை செப்டம்பர் 19 அன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், மஹாதேவபுரா பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அங்குள்ள சட்டவிரோத வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பெங்களூருவில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புதான் வெள்ளத்திற்கு காரணம் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பாவலி குற்றம் சாட்டினார். மேலும் “நாங்கள் ஆக்கிரமிப்பை அகற்றத் தொடங்கியுள்ளோம், இதற்கு குறைந்தது 3 மாதங்கள் ஆகும்” என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in