குடிமக்கள் அனைவருமே குற்றவாளிகளா?

குற்றவியல் நடைமுறை மசோதா 2022 என்னும் பேராபத்து!
குடிமக்கள் அனைவருமே குற்றவாளிகளா?
ரவிக்குமார்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்ட மசோதா ஒன்று இன்று (04.04.2022) மக்களவையில் விவாதத்திற்காகப் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. ‘குற்றவியல் நடைமுறை (அடையாளம் காணுதல்) மசோதா 2022 ‘ என்ற இந்த மசோதா சில நாட்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ‘சிறைவாசிகள் அடையாளப்படுத்துதல் சட்டம் 1920’ என்பதற்குப் பதிலாக இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது.

“ தற்போது நடைமுறையில் உள்ள ‘சிறைவாசிகள் அடையாளப்படுத்துதல் சட்டம் 1920’ ஒருசிலரின் அடையாளங்களைச் சேகரிப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான நபர்களின் அடையாளங்களைச் சேகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது அதன்மூலம் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாட்டை மேலும் சிறப்பாக ஆக்க முடியும்” என்று இந்த மசோதா கொண்டுவரப்படுவதற்கான நோக்கத்தை ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.

1920 -ம் ஆண்டு சட்டத்தைத் திருத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்ட காரணத்தால் இதற்கான சில திருத்தங்களை இந்திய சட்ட ஆணையம் 1980-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தனது 87 -வது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அப்போது எந்தச் சட்டமும் உருவாக்கப்படவில்லை.

தற்போது இந்திய ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த மசோதாவில் இருக்கும் விஷயங்களும் இந்திய சட்ட ஆணையம் முன்மொழிந்த மாற்றங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு மாறாக, இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவும் அவர்களது அந்தரங்கத்தில் சட்டவிரோதமாகத் தலையிடுவதாகவும் இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நடைமுறையில் உள்ள 1920-ம் ஆண்டு சட்டத்தில் சிறைவாசிகளின் கைரேகை மற்றும் கால் பதிவுகளை சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்கூட உள்ளங்கை பதிவுகளையும் சேர்த்து எடுக்க வேண்டும் என சட்ட ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது. ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டு இருக்கிற இந்த சட்ட மசோதாவில் கைரேகைகள், உள்ளங்கை பதிவுகள், கால் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழிப் படலத்தின் பதிவு, கையொப்பம் , ஒருவர் எழுதும் விதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் சேகரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

சட்ட ஆணையம் தனது அறிக்கையில் தனிநபரின் அந்தரங்கத்தில் தலையிடாதவாறு பதிவுகள் சேகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாக தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா அனைத்து விதமான அந்தரங்க உரிமைகளிலும் அத்து மீறித் தலையிடுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் ஒரு ஆண்டு அதற்கு மேல் தண்டனை பெற்ற சிறைவாசிகள், கடுங்காவல் தண்டனை பெற்ற சிறைவாசிகள் ஆகியோரின் பதிவுகளை மட்டுமே சேகரிக்க அனுமதி வழங்குகிறது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்ட மசோதாவோ கைது செய்யப்பட்டவர்கள், தண்டனை பெற்றவர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருடைய பதிவுகளையும் சேகரிக்க வகை செய்கிறது.

அதுமட்டுமின்றி எவருடைய தகவல்களையும் அளவுகளையும் சேகரிக்க ஒரு மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம் என்றும் அனுமதி வழங்குகிறது. தேசிய குற்ற ஆவண மையம் இந்தத் தகவல்களையெல்லாம் மாநில அரசுகளிடமிருந்து பெற்று மையப்படுத்திய விதத்தில் பாதுகாக்கவேண்டும் என்று இந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் ஆவணங்களை 75 ஆண்டுகள் வரை பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் அதிகாரத்திற்குள் வருவதால் மாநில அரசுகளே விதிகளை உருவாக்க அதிகாரம் படைத்தவை என்று இப்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டு இருக்கிற சட்ட மசோதா இந்திய ஒன்றிய அரசும் இதற்கான விதிகளை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் எவரையும் குற்றவாளியாகக் கருதி கண்காணிக்க முடியும். அதன் மூலம் அவர் மட்டுமல்ல அவரைச் சார்ந்தவர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரை சட்டத்தின் புதிய வடிவமே ஆகும்.

ட்ரோன்களைப் பயன்படுத்தி குடிமக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சேகரிப்பது இந்த சட்டத்தின்மூலம் நியாயப்படுத்தப்படுகிறது.

இது தனிநபர் அந்தரங்கம் தொடர்பாக புட்ட சாமி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். போக்குவரத்து விதிகளை மீறியதாக, முகக் கவசம் அணியவில்லை என்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் மீது வழக்கு பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி அவர்கள் அனைவரும் தண்டனைபெற்ற குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள். அவர்களது அத்தனை விதமான அடையாளங்களும் இனி பதிவு செய்யப்படும்.

இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோதே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இப்போதும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தைக்கொண்டு இந்த மசோதாவை மோடி அரசு சட்டமாக்கிவிடக் கூடும்.

எதிர்க்கட்சிகள் இந்த சட்ட மசோதாவைத் திரும்பப் பெறச் சொல்லவேண்டும். அல்லது இந்த மசோதாவை செலக்ட் கமிட்டி ஆய்வுக்கு அனுப்புமாறு வலியுறுத்த வேண்டும்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன் முயற்சி எடுக்கவேண்டும்.

Related Stories

No stories found.