
நாட்டின் 74-வது குடியரசுத் தின விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் கிள்ளையில் அரசுப் பள்ளியில் பயிலும் 900 மாணவர்களும் அங்குள்ள நூலகத்தில் ஆயுட்கால உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பள்ளியில் மொத்தம் 900 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக மாற்ற ஒரு முன்னுதாரண திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டார் கிள்ளை பேரூராட்சியின் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவிந்திரன். அதை செயல்படுத்தும் விதமாக அவர்களில் 600 மாணவர்களுக்கு நூலக ஆயுட்கால கட்டணத்தை அவரே செலுத்தினார்.
மீதமுள்ள 300 மாணவர்களுக்கு ஆர்.எஸ் டிரஸ்ட் என்ற சேவை அமைப்பின் மூலமாக கட்டணம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 900 மாணவர்களும் கிள்ளை கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பவானி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். அனைவருக்கும் உறுப்பினர் அட்டையை வழங்கி கிள்ளை ரவிந்திரன் உரையாற்றினார்,
மாவட்ட நூலகர் சங்கர், கிளை நூலகர் பால் ஜோன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மதுரச்செல்வி, ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒரு பள்ளியின் அனைத்து மாணவர்களும் நூலகத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருப்பது முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்து ஊர்களிலும் இதுபோன்று செயல்படுத்தப்பட வேண்டும்.