
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 40 பேரும் உயிருடன் இருப்பதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நடைபெற்றுவருகிறது. சார்தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் நோக்கத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதையில் பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், மீட்பு பணி முடிய 2-3 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதால், சுரங்கப்பாதையில் ஆக்ஸிஜன் குழாய் வைத்து தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மீட்புப்பணி குறித்து பேசிய உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். உள்ளே சிக்கி உள்ள தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. அவர்கள் சுவாசிப்பதற்கு துளைகள் வழியாக ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. அவர்களை தொடர்பு கொள்ள முடிந்துள்ளது. அவர்கள் அனைவரையும் உயிருடன் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
சுரங்கப் பாதைக்குள் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளதால் கவலையில் இருக்கும் சக தொழிலாளர்கள் மற்றும் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்ற அந்த தகவலால் ஓரளவு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.