தமிழக வனப்பகுதிகளில் பரவியுள்ள அன்னிய மரங்கள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக வனப்பகுதிகளில் பரவியுள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்துவதற்கு தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்துக்கு அனுமதியளித்த உத்தரவை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட துறை செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னியமரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனப்பகுதியில் பரவிக்கிடக்கும் அன்னிய மரங்களை அகற்றுவதற்கான ஆய்வுகளை வனத்துறை துவங்கியுள்ளதாகவும், ஆய்வுக்குப் பின் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறி வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அதில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் பணியை தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாகவும், டன்னுக்கு 350 ரூபாய் வீதம் வழங்குவது தொடர்பாகவும் கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதால், இதுசம்பந்தமாக உத்தரவு பிறப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

கடந்த முறையும் இதே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, அரசின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர். மேலும், அடுத்த விசாரணையின் போது, அன்னிய மரங்களை அகற்றும் பணியை செய்தித்தாள் நிறுவனத்துக்கு வழங்கியது தொடர்பான உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட துறை செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மேலும், அரசின் கொள்கை காகிதங்களில் மட்டும் இல்லாமல் செயல்வடிவம் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in