
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவரை அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டு ஆதரிக்க வேண்டும் என்று அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் கூறுகையில், "பல ஆண்டுகளாக பல கட்சிகளுக்கும் குவாட்டருக்கும் பிரியாணிக்காகவும் கொடி பிடித்தோம், கோஷம் போட்டோம், கோட்டைக்கு போக ஓட்டும் போட்டோம். இனிமேல் அதைச் செய்ய தயாராக இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டாஸ்மாக் மதுபிரியர்களின் குடும்பங்களுக்காக குரல் கொடுத்திட தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் முடிவு செய்துள்ளது. எங்கள் சங்கத்தின் சார்பாக வேட்பாளர் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.
அவரை அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக ஏற்றுகொள்ள வேண்டுகிறேன். இதுவரை மற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம். இந்த முறை எங்களது வேட்பாளருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். எங்கள் வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரிக்கும் கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் டாஸ்மாக் மதுப் பிரியர்களின் முழு ஆதரவையும் தர தயாராக இருக்கிறோம்.
இப்போது எங்கள அலட்சியம் செய்யும் கட்சிகளை அடுத்த தேர்தலில் நாங்கள் அலட்சியம் செய்வோம். அக்கட்சிகளின் கொடிகளை குவாட்டருக்கும், பிரியாணிக்காகவும் இனி எப்போதும் பிடிக்கமாட்டாம். அதனால் எங்களது வேட்பாளர் ஆறுமுகத்தை பொது வேட்பாளராக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.