
மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளது மது குடிப்போரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது என்ன திடீர் முடிவு என்று அவரிடம் அலைபேசியில் கேட்ட போது, "தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ஆகிய நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது மிக அதிகமாக விற்பனையாகும். அதனை ஒவ்வொரு முறையும் சாதனையாக மதுவிலக்குதுறையோ அல்லது டாஸ்மார்க் நிர்வாகமோ வெளியிடும். செய்தித்தாள்கள் இவ்வளவு கோடிக்கு விற்பனை மது விற்று சாதனை என்று செய்தித்தாள்களில் போடுவார்கள்
ஆனால், பொங்கல் பண்டிகை முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் இத்தனை கோடிக்கு மது விற்பனையானது என்று இதுவரை முக்கியத்துவம் கொடுத்து எதிலும் செய்திகள் வரவில்லை. அதனால் இந்த பொங்கலுக்கு மது விற்பனை மிகவும் குறைந்து போய்விட்டதோ என்கிற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி உண்மையிலேயே மது விற்பனை குறைந்து போயிருந்தால் எங்கள் சங்கத்திற்கு இனி வேலை இல்லை.
அதனால் சங்கத்தை கலைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சந்தேகத்தைப் போக்கவேண்டிய கடமை தமிழக அரசுக்கும் மதுவிலக்கு துறைக்கும் இருக்கிறது. எத்தனை கோடிக்கு விற்பனை நடந்துள்ளது? உண்மையில் மது விற்பனை குறைந்திருக்கிறதா அல்லது வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
அப்படி உண்மையிலேயே குறைந்திருந்தால் நாங்கள் எங்கள் சங்கத்தைக் கலைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கருதுகிறோம். ஆனால், மது விற்பனை குறைந்துள்ளதற்கு காரணம் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டம் தான் என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம். மற்ற போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரிப்பதால் மது விற்பனை குறைந்திருக்கலாம்.
எப்படி பார்த்தாலும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. அதைக் கண்டு கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. எதுவாக இருந்தாலும் அரசு தெளிவு படுத்தினால் எங்கள் சங்கத்தை கலைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் " என்றார் செல்லப்பாண்டியன்.