‘ராமர் கோயிலை இடித்து மீண்டும் பாபர் மசூதி எழுப்புவோம்’

அல்-கய்தா பெயரில் மிரட்டல்
‘ராமர் கோயிலை இடித்து மீண்டும் பாபர் மசூதி எழுப்புவோம்’

அயோத்தி ராமர் கோயிலை இடித்து அந்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதி எழுப்பப்படும் என்று அல்-கய்தா பயங்கரவாத இயக்கத்தின் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளன. இதையொட்டிய செய்திகள் அதிகம் வெளியாவதன் மத்தியில், ராமர் கோயிலுக்கு எதிரான செய்திகளும் முளைத்துள்ளன.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்த அல்-கய்தா அமைப்பின் பெயரில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மலைக்குன்றுகளில் பதுங்கிய ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட அல்-கய்தா இயக்கத்தினரை பின்தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஆப்கனில் முகாமிட்டது. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதுடன் அல்-கய்தா அமைப்பின் எஞ்சிய தளபதிகளும் வேட்டையாடப்பட்டனர். தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்ட சிலர் ஐஎஸ் அமைப்பிலும், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட சில பயங்கரவாத அமைப்புகளிலும் தஞ்சமடைந்தனர். இந்த வகையில் அதிகாரபூர்வமான அல்-கய்தா என்பது ஆளரவமின்றி இருந்த சூழலில், ராமர் கோயிலுக்கான மிரட்டலின் பெயரில் மீண்டும் இந்த பயங்கரவாத அமைப்பு செய்திகளில் அடிபட்டுள்ளது.

அல்-கய்தா பயங்கரவாத அமைப்புக்கான அதிகாரபூர்வ ஊடகத்தின் தலையங்கத்தில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ’பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவது போலவே, மீண்டும் அந்த இடத்தில் பாபர் மசூதியை எழுப்புவதற்காக ராமர் கோயில் தகர்க்கப்படும். இதற்கான ஜிகாத் போரில் இந்திய முஸ்லீம்களும் பங்கேற்க வேண்டும். தங்களது பங்களிப்பை உழைப்பாகவோ, பொருளாகவோ தரவேண்டும்’ என்று தொடங்கி இந்திய முஸ்லிம்களுக்கான அறைகூவலோடு, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடிக்கான மிரட்டல்களுடன் தலையங்கம் முடிந்துள்ளது.

ராமர் கோயிலுக்கான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் முடிவதையொட்டி, 2024 தொடக்கத்தில் ராமர் கோயில் பயன்பாட்டுக்கு வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in