சபரிமலையில் பத்து லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கிய ஐயப்ப சேவா சங்கம்

சபரிமலையில் பத்து லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கிய  ஐயப்ப சேவா சங்கம்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை சபரிமலையில் பத்து லட்சம் பேருக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் பக்திப்பெருக்கோடு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், “நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 27-ம் தேதி வரையிலான மண்டல காலத்தில் மூன்றுவேளையும் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் மகரவிளக்கு பூஜைக்காக வரும் 30-ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கிறது. அன்று முதல் நடை திறந்திருக்கும் ஜனவரி 19-ம் தேதிவரை காலை முதல் இரவுவரை பக்தர்களுக்குத் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஐயப்ப பக்தர்களை மருத்துவ சிகிச்சைக்காக அருகாமை மருத்துவமனை, பம்பா அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்குக் கொண்டுசெல்ல 628 முறை ஸ்டெச்சர் சர்வீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அன்னதானம், மூலிகை குடிநீர், சேவைகளில் 1064 அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் தொண்டர்கள் ஈடுபட்டனர்.

அன்னதானத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், கேரள காவல்துறை, அறநிலையத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மகரவிளக்கு காலத்தில் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதி, ஸ்டெச்சர் சர்வீஸ் வசதிகளை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மத்திய பொதுச் செயலாளர் கோவிந்தபத்மன், மத்திய, மாநில நிர்வாகிகள் மு.விஸ்வநாதன், அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி, சன்னிதான முகாம் அலுவலர் பாலகணேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in