தந்தை குறித்து அகிலேஷ் யாதவ் உருக்கமான பதிவு - ‘முதன்முறையாக சூரியன் இல்லாமல் காலை விடிந்தது’

தந்தை குறித்து அகிலேஷ் யாதவ் உருக்கமான பதிவு - ‘முதன்முறையாக சூரியன் இல்லாமல் காலை விடிந்தது’

தனது தந்தை முலாயம் சிங் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உருக்கமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் அவரது சொந்த கிராமமான சைபாயில் நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது தந்தை குறித்த உணர்ச்சிகரமான ட்வீட் ஒன்றைப் பதிவு செய்தார்.

நேற்று மனிதக் கடலுக்கு மத்தியில் முலாயம் சிங் யாதவ் தகனம் செய்யப்பட்ட இடத்திலிருந்து இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட அகிலேஷ் யாதவ், ‘முதன் முதலாக சூரியன் இல்லாமல் காலை வந்தது போல் தான் உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மூன்று முறை உத்தரபிரதேச முதல்வராகவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த முலாயம் சிங் யாதவ் தனது 82 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.

'நேதாஜி' என அன்புடன் அழைக்கப்படும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த கட்சி வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து அரசியல் தலைவர்களும் நேற்று உ.பி.யின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள முலாயம் சிங் யாதவின் சொந்த கிராமமான சைபாய்க்கு வந்தனர்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சமாஜ்வாதி எம்.பி ஜெயா பச்சன், நடிகர் அபிஷேக் பச்சன், பாஜக தலைவர் வருண் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக ராஜ்யந்த் சிங் அஸ்திக்கு மலர்வளையம் வைத்தார். உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் இறுதிச் சடங்கின் போது அகிலேஷுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in