ஒடிசா செல்ல விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு; ’துக்க வீட்டில் திருடும் கும்பல்’ என திமுக நிர்வாகி கண்டனம்!

ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய உறவினர்களைக் காண, அங்கு அவசர பயணமாக விமானத்தில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை காரணமாக்கி, விமான கட்டணத்தை உயர்த்தியுள்ள விமான நிறுவனங்களின் செயலுக்கு திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நேற்று முன் தினம் நடந்த ரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் ஒடிசாவின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் பயணம் தடைபட்ட பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், துக்க நிகழ்வில் துணை நிற்கவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் ஒடிசா தலைநகரான புவனேஸ்வருக்கு செல்கின்றனர். புவனேஸ்வருக்கு செல்ல போதுமான ரயில் வசதி இல்லாத நிலையில், அவசரத் தேவைக்கு விமான சேவையை நாடி வருகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விமான நிறுவனங்கள் புவனேஸ்வருக்கான விமான கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளன. விமான நிறுவனங்களின் இந்த சந்தர்ப்பவாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது குறித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி தனது டுவிட்டரில் பதிவில், ’துக்க வீட்டில் திருடும் பாஜக கும்பல்! இறந்தவர்களின் துக்கம் விசாரிக்க ஒடிசா போகிறவர்களுக்கு ரூ5000 விமான கட்டணம், இப்போது ரூ60000! இது சாவு வீட்டில் களவாடும் வேலை!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in