
ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது, போதையிலிருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த வழக்கில், ஒன்றரை மாதங்கள் கழித்து குற்றம்சாட்டுக்கு ஆளான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் கிளாஸில் இந்த சம்பவம் நடந்தது. போதை வசத்திலிருந்த ஆண் பயணி ஒருவர் சக பயணியான மூதாட்டி மீது சிறுநீர் கழித்தார். சம்பவம் தொடர்பாக அங்கிருந்த விமான பணியாளர்களோ, அதன் பின்னர் ஏர் இந்தியா நிர்வாகமோ எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மூதாட்டி சம்பவம் குறித்து ஏர் இந்தியா சேர்மனுக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் மூதாட்டியை சார்ந்தோர் பதிவிட்டனர்.
நவ.26 அன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பொதுவெளியில் கண்டனங்கள் எழுந்த பின்னரே ஏர் இந்தியா நிர்வாகம் முதல் காவல்துறை வரை நடவடிக்கையில் இறங்கினர். காவல்துறை விசாரணையில் குற்றம் இழைத்தவர் பெயர் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (எ) சஞ்சய் மிஸ்ரா என்றும், அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவராக முக்கிய பொறுப்பில் பணிபுரிபவர் என்றும் தெரிய வந்தது.
இதற்கிடையே சங்கர் மிஸ்ரா தனது வழக்கறிஞர்கள் வாயிலாக மூதாட்டி தரப்பை சமாதானப்படுத்த முயன்றார். சிறுநீர் கழித்த ஆடைகள் மற்றும் உடைமைகளை சலவை செய்து தந்தது முதல் இழப்பீடாக ஒரு தொகை அளித்தது வரை செயல்பட்டார். ஆனால் மூதாட்டி தரப்பில் சங்கர் மிஸ்ரா அளித்த தொகையை திருப்பி அனுப்பினார்கள். தொடர்ந்து சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்ததால், அவருக்கு எதிராக டெல்லி போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் விடுத்தனர்.
4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தநிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த சங்கர் மிஸ்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக மற்றொரு புகாரும் கிளம்பியுள்ளது. இவற்றை அடுத்து, விமான பயணத்திற்கான நெறிமுறைகள் மற்றும் விமான சிப்பந்திகள் அப்போது உடன் செயலாற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் புதிய அறிவுறுத்தலகளை வெளியிட்டுள்ளது.