
நேரம் தவறாத விமான சேவை எனும் பெயரை ஏர் இந்தியா விமான நிறுவனம் பெற்றிருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெயர் அந்நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கிறது.
உள்நாட்டு விமானப் பயணங்களில் விமான நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதன் அடிப்படையில், அவற்றின் செயல்திறனை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நிர்ணயிக்கிறது. இதற்கான பட்டியலையும் வெளியிடுகிறது. அந்த வகையில், 90.8 சதவீத செயல்திறனை வெளிப்படுத்தி இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஏர் இந்தியா.
பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய பெருநகர விமான நிலையங்களில் ஏர் இந்தியாவின் செயல்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. விமான நிலையத்தை வந்தடையும் நேரம், மற்றும் புறப்படும் நேரம் இதில் பரிசீலிக்கப்படும். அதன்படி, கடந்த மாதம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிடவும் 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஏர் இந்தியா விமானங்கள் வந்து சென்றிருக்கின்றன.
டாடா குழுமத்துக்குச் சொந்தமான விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. அவை 89.1 சதவீத செயல்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றன. இண்டிகோ மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பயணிகளின் புகார்களுக்கு அடிக்கடி இலக்காகும் கோஃபர்ஸ்ட் விமான நிறுவனம் 60.7 சதவீதம் பெற்று கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.
2014 முதல் ஒரு மாதத்தில் கூட ஏர் இந்தியா விமான சேவை, குறித்த நேரத்தில் அமைந்ததில்லை. 2019 அக்டோபர் மாதம் 54.3 சதவீத செயல்திறனுடன் கடைசி இடத்தில் ஏர் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.