விமானத்தில் சிறுநீர் கழித்த 2வது சம்பவம்: ஏர் இந்தியாவுக்கு மீண்டும் ரூ.10 லட்சம் அபராதம்

ஏர்இந்தியா விமானங்கள்   (கோப்புப்படம்)
ஏர்இந்தியா விமானங்கள் (கோப்புப்படம்)ஏர்இந்தியா விமானங்கள் (கோப்புப்படம்)

பாரிஸ்-டெல்லி விமானத்தில் ஒரு பெண்ணின் காலி இருக்கையின் போர்வையில், ஆண் ஒருவர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைப் புகாரளிக்காததற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பாரிஸ்-டெல்லி விமானத்தில் டிசம்பர் 6-ம் தேதி நடந்த சம்பவத்தை அதன் உள் குழுவிற்கு தெரிவிக்காமல் டாடா நடத்தும் விமான நிறுவனம் தாமதம் செய்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவில் நடந்த இந்தச் சம்பவம் ஊடகங்களில் வருவதற்கு முன்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. டிஜிசிஏ ஏர் இந்தியாவிடம் விவரம் கேட்ட பிறகே டிசம்பர் 6 ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

05.01.2023 அன்று ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் சம்பவ அறிக்கையை கேட்கும் வரை இந்த சம்பவம் குறித்து அவர்கள் புகாரளிக்கவில்லை என்று டிஜிசிஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் சக பெண் பயணியின் மீது ஆண் ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளின் இருக்கையில் ஒருவர் சிறுநீர் கழித்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in