தொகுதி மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு; போராடிய எம்எல்ஏ கைது: விஸ்வரூபம் எடுக்கும் என்எல்சி பிரச்சினை!

கைது செய்யப்பட்டு வேனில்  ஏற்றப்படும்  அருண்மொழித்தேவன்
கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்படும் அருண்மொழித்தேவன்

என்எஸ்சி நிறுவனத்தின் சார்பில் சுரங்க விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ள வளையமாதேவி கிராமத்திற்கு சென்ற புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அரண்மனைத்தேவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இயங்கிவரும்  என்எல்சி இந்தியா நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுத்து வருகிறது. அதன் மூலம் மின்சார உற்பத்தியும் செய்யப்பட்டு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களுக்கும் விநியோகப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நிலக்கரியின் தேவை அதிகரித்துள்ளதால் இங்குள்ள  சுரங்கங்களை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ள  என்எல்சி நிர்வாகம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி,  கீழ் வளையமாதேவி,  கரிவெட்டி,  கத்தாழை, மும்முடிச் சோழகன் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தியுள்ளது.

இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் நெய்வேலி என்எல்சியைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முதல் என்எல்சி தனது பணிகளை கிராமங்களில் தொடங்கியுள்ளது. அதற்கு பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நேற்று  போராட்டங்கள் நடைபெற்றன.  அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  நாளை முழு அடைப்பு போராட்டத்தில் பாமக அறிவித்துள்ளது.  

இந்த நிலையில் புவனகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் அருண்மொழித் தேவன் தனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை சந்திப்பதற்காக வளையமாதேவி கிராமத்திற்கு இன்று சென்றார். அங்கு ஊருக்குள் யாரும் செல்லாதவாறு போலீஸார் பலத்த பாதுகாப்பு செய்திருந்தனர்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அருண்மொழித்தேவன் தனது தொகுதி மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.

அவர் வந்திருக்கும் தகவல் கேட்டு அங்கு ஊர் பொதுமக்கள் விவசாயிகள் அவரை சந்திக்க வந்தனர். அவர்களையும் போலீஸார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதனால் அனைவரும் அருண்மொழித்தேவனோடு இணைந்து  சாலையோரம் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து அருண்மொழித்தேவன் மற்றும் அவருடன் இருந்த அதிமுக  ஒன்றிய செயலாளர்கள் விநாயகம், சீனிவாசன், வேல்முருகன், சந்திரகுமார், ஜெயசீலன் மற்றும் கிராம மக்கள் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகள்,  மற்றும் விவசாயிகள்,  பொதுமக்களின் எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக  விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்,  விழுப்புரம் டிஎஸ்பி ஸ்ரீநாதா உட்பட  500க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவரங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தண்ணீர் பீச்சியடிக்கும் வஜ்ரா  வாகனம்  உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த கிராமங்கள் சீல் வைக்கப்பட்டது போன்று போலீஸாரால் பாதுகாப்பு வளையம் அமைக்கப் பட்டு  சூழப்பட்டுள்ளதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in