
திருவெறும்பூர் அருகே நடுரோட்டில் அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்தவர் கோபி. இவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கோபி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்தநிலையில் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று உணவை பார்சல் செய்ய சொல்லிவிட்டு வெளியில் சென்றார். சிறிது நேரம் கழித்து அதை வாங்க வந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் கோபியை திடீரென சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டத் தொடங்கினார்.
அவர்களிடம் இருந்து கோபி தப்பி ஓட முயன்றபோது விரட்டிச் சென்ற அந்த கும்பல் கோபியை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் பட்ட கோபி அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், கோபியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இந்த கொலை முன் விரோதத்தால் நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மோப்பநாய் லீலி மற்றும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அங்குள்ள தடயங்களை ஆய்வு செய்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலையான கோபி மீதும் அப்பகுதியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.