
மதுரை அருகே நேற்று காலை நடந்த அதிமுக கவுன்சிலர் கொலையில் தொடர்புடையதாக கூறி 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மாவுத்தம்பட்டியை சேர்ந்தவர் சந்திரபாண்டியன். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர். நேற்று காலை பாலமேடு அடுத்துள்ள லிங்கவாடி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது சந்திரபாண்டியனை வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலக்கோட்டை மாதேவன்பட்டியை சேர்ந்த அபிஷேக், அழகர்சாமி, ரவிக்குமார், விஜயகுமார், தளபதி, கரண் ஆகிய 6 பேர் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சரணடைந்த 6 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.