`செறிவூட்டப்பட்ட அரிசி தேவையில்லை; தீட்டாத அரிசியை தாருங்கள்'- தமிழக அரசுக்கு பாமயன் முக்கிய கோரிக்கை

பாமயன்
பாமயன்

தமிழகத்தில் அங்காடிகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல்  1 ம் தேதி முதல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத திட்டம் என்று இயற்கை வாழ்வியல் அறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

வேளாண் விஞ்ஞானியும் எழுத்தாளருமான பாமயன் இந்த திட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ``தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் 'சத்துக் கூட்டப்பட்ட' என்ற பெயரில்  வண்ண அரிசி கலந்த அரிசியை தமிழக அரசால் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ரத்தசோகை, நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு உள்ளதால், இரும்புச் சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்றவற்றைச் சேர்த்து செயற்கை அரிசியாக்கி ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. 

இதற்காக இந்திய அளவில்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு 3,000 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளன. ரத்தசோகை குறைபாடு அதிகம் உள்ள மாநிலங்கள் பிஹார், மேற்கு வங்கம், அரியானா, அந்தமான் நிகோபார் ஆகிய இடங்களில்  இங்கு இந்தத் திட்டம் இல்லை. ஆனால்  குறைவான பாதிப்புகள் கொண்ட கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இத்திட்டம் அறிமுகம் ஏன்? 

உலகம் முழுவதும் ரசாயனங்களை உணவில் சேர்க்கும் செயற்கை ஊட்டமேற்றும் முறைக்கு எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன. அளவுக்கு அதிகமானால் நஞ்சாகுமென அமெரிக்கன் சர்னல் ஆப் கிளினிக்கல் நுட்ரீசியன் தெரிவிக்கிறது.

பழைய சோறு, நீராகாரம், கேப்பைக் கூழ், கம்பங்கூழ் ஆகியவற்றில் வைட்டமின் பி-12 கிடைக்கும். பழைய சோறு, கூழ் குடிக்கும் பழக்கத்தை இழிவு செய்யாமல் மீட்டால் போதும். தீட்டாத அரிசியில் இரும்புச் சத்து உள்ளது. தீட்டிய வெள்ளை அரிசிக்குப் பதில் தீட்டாத அரிசியை ரேசன் கடைகளில் வழங்கலாம். முருங்கைக் கீரையில் ஒரு கிலோவிற்கு 54.9 மி.கி. (அரிசியைவிட இரண்டு மடங்கு) உள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனமான அமுல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளையான சுதேசி சாக்ரன் மஞ்ச் ஆகியவை உணவுப் பொருளில் வலிவூட்டும் முறையை எதிர்த்துள்ளது. எஸ்கிமோக்கள் ஒரு நாளைக்கு நான்கு கிலோ இறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக அனைவரும் அப்படி உண்ண வேண்டிய கட்டாயமில்லை.

தமிழர்கள் அரிசி உண்கிறார்கள் என்பதற்காக உலகில்  அனைவரும் அரிசி உண்ண வேண்டும் என்று கட்டாயமில்லை.  அனைத்தையும் சந்தையாக்குவது என்பது ஆபத்தானது, குறிப்பாக உணவும், உடல்நலமும் அறமற்ற சந்தைக்குள் வரும்போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 

உப்புக்கு தடை எதிர்த்து போராடிய காந்தி நாட்டில் கல் உப்பை விற்கக் கூடாது என்று தடை உள்ளது. அயோடின் உப்பு மட்டுமே விற்கலாம். ஆனால் என்ன பயன்? அயோடின் பற்றாக்குறை இல்லாத ஒரு மாநிலம் கூட இல்லை. சாதாரண உப்பைத் தடுத்ததால் பயன் பெற்றவர்கள் பெரும் முதலாளிகளே. இந்தச் செயற்கை அரிசியை இருப்பு வைக்கும்போது சத்துக்கள் குறைவதை கம்போடியா ஆய்வுகள் காட்டுகின்றன. இதை விற்பவர்கள் சத்துகளின் ஆயுட்காலம் 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை கைவிட்டு அதற்கு பதிலாக அங்காடிகளில் தீட்டாத அரிசியை வழங்கலாம். அது அதிக பயனைத் தரும். தீர்வுகளை நம்மிடமிருந்து தேடுவதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தேடுகின்றோம். இது தற்சார்பிற்கு வழி வகுக்காது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in