
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வங்கியில் 40 லட்சத்தை கையாடல் செய்த சங்கத்தின் செயலாளர் காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் தேவிப்பட்டினம் அருகே நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பொட்டகவயலில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 4-ம் தேதி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் திடீரென தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட தொகை வங்கியில் இருப்பு இல்லாதது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்த போது, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் நாகராஜ் ரூ.40 லட்சம் வரை கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ஒரு வாரத்திற்குள் பணத்தை திரும்ப செலுத்தும்படி நாகராஜிக்கு அதிகாரிகள் அவகாசம் அளித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நாகராஜ், கடந்த 19-ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது குறித்து நாகராஜின் மகன் செல்வேந்திரன் காவல்துறையினர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.