
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையினால் பல ஏக்கரில் பயிடப்பட்டிருந்த மக்காசோள பயிர்களும், வாழை மரங்களும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டுப்பட்டி, சிங்கார கோட்டை, நல்லாம்பிள்ளை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கற்பூரவள்ளி, ஒட்டுநாடு, செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்களும், மக்காசோள பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இப்பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இங்கு பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் 50 ஏக்கர் பரப்பளவிலான மக்காசோள பயிர்கள் மழை மற்றும் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் முறிந்தும் சாய்ந்தும் சேதமாகின.
வாழை தார்கள் பலன் தரக் கூடிய தருவாயில் முறிந்து விழுந்ததை கண்ட விவசாயிகள் வேதனையில் அதிர்ந்து போயினர். இதே போல நல்ல முறையில் வளர்ந்த மக்காசோள பயிர்கள் சூறைக்காற்றில் சிக்கி வேரோடு மண்ணில் சாய்ந்ததால் அதனை நம்பியிருந்த விவசாயிகளுக்கும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வத்தலக்குண்டு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.