‘அக்னிப் பாதை திட்டத்தால் வீரர்களின் போர்த் திறன் நீர்த்துப்போய்விடும்’ - பகவந்த் மான் கண்டனம்

‘அக்னிப் பாதை திட்டத்தால் வீரர்களின் போர்த் திறன் நீர்த்துப்போய்விடும்’ - பகவந்த் மான் கண்டனம்

தரைப்படை, விமானப் படை, கடற்படை என இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் ஆள்சேர்க்க ‘அக்னிபத்’ (அக்னிப் பாதை) எனும் திட்டத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத சிங் அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்திருக்கிறது.

இந்நிலையில், இத்திட்டத்தால், ராணுவ வீரர்களின் போர்த் திறன் நீர்த்துப்போய்விடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியிருக்கிறார். பாதுகாப்புப் படைகளில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் இளைஞர்கள் வேலையில்லாதவர்களாகிவிடுவார்கள் என்றும் அவர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ஆயுதப் படைகளில் சேர்வதற்கான உடற்தகுதித் தேர்வில் வெற்றிபெற்று காத்திருக்கிறார்கள். ஆனால், எழுத்துத் தேர்வுக்காக அவர்கள் அழைக்கப்படவில்லை. இது அபத்தமானது’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், ஓய்வூதியம் ஏதுமின்றி பாதுகாப்புப் படைகளில் நான்கு ஆண்டுகள் இளைஞர்கள் பணியாற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் அக்னிப் பாதை திட்டம் விசித்திரமானது என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது ராணுவத்தில் சேர்ந்து தாய்நிலத்துக்குச் சேவை புரிய விரும்பும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி என்றும் கண்டனம் தெரிவித்திருக்கும் அவர், இத்திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

முன்னதாக, இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், “அரைவேக்காட்டுத்தனமான இந்தக் கொள்கை அபத்தமானது. இத்திட்டம் வேலைவாய்ப்பின்மை, வறுமை எனும் தீய சூழலுக்குள் இளைஞர்களைத் தள்ளிவிடும். அது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஊறுவிளைவிக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இது ராணுவத்தை அவமதிக்கும் திட்டம் என்றும், இளைஞர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in