சென்னையில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள 'அக்னிபத்’!

சென்னையில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள 'அக்னிபத்’!

வடமாநிலங்களில் நடந்து வந்த அக்னிபாத் போராட்டம் சென்னையில் துவங்கியுள்ளதால், காவல்துறையினர் பல்வேறு இடங்களில் இன்று கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்புத்துறை சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், 17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என்று கூறப்பட்டிருந்தது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபத் என்றும் பெயரிடப்பட்டது. ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக பிஹார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதற்கு மத்தியில், இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில், இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் கலைந்து செல்லாத நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் மெரினா, போர் நினைவு சின்னம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் இன்று கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலும் – கொடிமர இல்லம் சாலை தொடங்கி போர் நினைவுச் சின்னம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in