ஒரு கோடி பணம் கேட்டு நிதி நிறுவன ஏஜென்ட் கடத்தல்: வலைவிரித்து பிடித்த காவல்துறை

ஒரு கோடி பணம் கேட்டு நிதி நிறுவன ஏஜென்ட் கடத்தல்: வலைவிரித்து பிடித்த காவல்துறை

ஆருத்ரா நிதி நிறுவன ஊழியரிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் ஒரு கோடி பணம் கேட்டு அவரைக் கடத்திய சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த ஆந்திர தாசராபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன்(45). இவர் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என அவர் கூறியதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பலர் கோடிக்கணக்கில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆருத்ரா நிறுவனம் சர்ச்சையில் சிக்கிய பிறகு இவரிடம் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தைக் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் தாமோதரன் மாயமானார்.

தனது கணவர் கடத்தப்பட்டிருப்பதாக பரதராமி காவல்நிலையத்தில் தாமோதரனின் மனைவி மகாலட்சுமி புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, மூன்று தனிப்படைகள் அமைத்து தாமோதரனை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தாமோதரனின் மனைவி மகாலட்சுமிக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர்கள் தாமோதரனை கடத்தி வைத்துள்ளதாகவும், ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும், பணம் கொடுக்காமல் போனால் கொலை செய்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேசிய செல்போன் சிக்னல் மூலம் விசாரணை நடத்திய காவல்துறையினர், குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியிலிருந்து தாமோதரனை மீட்டனர். அவரைக் கடத்திய ராஜ்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வேலூர் காவல் அதிகாரிகள் கூறுகையில், “ஆருத்ரா நிதி நிறுவனத்தில் நடைபெற்ற மோசடியைத் தொடர்ந்து, தாமோதரனை நம்பி பணம் கொடுத்த உறவினர்கள் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில் அவரை எல்லை பாதுகாப்பு படைவீரர் ரமேஷ், சுரேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று காலையில் கடத்தல்காரருக்குப் பணம் கொடுப்பதாக உறவினர் ஒருவர் மூலம் போலியாகப் பணப்பையை காவல் துறையினர் கொடுத்து அனுப்பி வைத்தனர். அவரைத் தொடர்ந்து சென்ற காவல்துறையினர் ஆந்திர மாநில எல்லையில் உள்ள சைனகுண்டா பகுதியில் கடத்தல்காரர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது எல்லை பாதுகாப்புப் படை வீரர் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார் ” என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in