`தங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை'- கோவையில் ஆய்வு செய்த பீகார் குழுவினருடன் வடமாநில தொழிலாளர்கள் தகவல்

வட மாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்கும் பீகார் குழுவினர்
வட மாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்கும் பீகார் குழுவினர்`தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை'- கோவையில் ஆய்வு செய்த பீகார் குழுவினருடன் வடமாநில தொழிலாளர்கள் தகவல்

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தியின் விளைவாக பீகார் குழுவினர் தமிழகம் வந்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பூரில் நேற்று ஆய்வு செய்த அவர்கள் இன்று கோவையில் தங்கள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த  லட்சக்கணக்கான தொழிலாளர்கள்  பணியாற்றி வருகிறார்கள்.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் கலெக்டர்கள் இது வதந்தி என தெரிவித்து வந்தனர். 

இதற்கிடையே காட்டுத்தீ போன்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியதால், வடமாநில தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதனால் தமிழக முதலமைச்சர் வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில்,  சமூக வலைதளங்களில் பரவும்  வீடியோக்கள் வதந்தி என விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

இதுபோல் வதந்தி பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகிற  நிறுவனங்களுக்கு சென்று போலீஸார் இது தொடர்பாக விளக்கம் அளித்தனர். மேலும், வதந்தியை நம்ப வேண்டாம் என  அவர்களுக்கு புரிகிற வகையில் விளம்பர பதாகைகள் மூலமாகவும், இந்தியில் பேசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையமும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

இதற்கான எண்களையும் ஒவ்வொரு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்களிடம் கொடுத்துள்ளனர். இதனால் கோவை, திருப்பூரில் எந்தவித அச்சமும் இன்றி வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று திருப்பூருக்கு பீகாரில் இருந்து அம்மாநில மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு பணி படை வீரர் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வருகை தந்தனர்.  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். தொழிலாளர்களுக்கு எவ்வித  அச்சுறுத்தலும் இல்லை என்பதை அவர்கள் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து இன்று கோவை மாவட்டத்தில் பீகார் குழுவினர்  ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஞ்சாலைகள், தொழில் நிறுவனங்களில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதை அந்த தொழிலாளர்கள் தங்கள் மாநில  குழுவினரிடம் விளக்கிக் கூறினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in