
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையின் மத்தியில், ஓரிரு வெளிச்சக் கீற்றுகளும் எட்டிப்பார்க்கின்றன.
கடந்த மாத இறுதியோடு, உக்ரைனில் களமாடும் ரஷ்யாவின் போர் நடவடிக்கை இரண்டாவது ஆண்டில் அடியெடுத்திருக்கிறது. அண்டை தேசத்தின் மீது ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போர் நடவடிக்கை, ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பல ஓட்டைகளை போட்டிருக்கிறது. சர்வதேச நாடுகள் முதல், குடிமக்கள் வரை பலதரப்பிலான அதிருப்தியையும் ரஷ்யா சம்பாதித்துள்ளது. எனவே விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தீவிரமாக களமாடி வருகிறது.
இதன் காரணமாக உக்ரைன் போர் உக்கிரமடைந்திருக்கிறது. ஆனபோதும், அங்கே நம்பிக்கை கீற்றாக சில நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. அவற்றில் ஒன்றாக, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராகிய கார்கிவ், தனது ஓராண்டு இருளில் இருந்து விடுபட்டிருக்கிறது. ரஷ்ய எல்லையிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கார்கிவ் நகரம், ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு அதிகம் ஆளானது. இதனால் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதுமே, அங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஓராண்டு காலமாக பகலை விட இரவில் கார்கிவ் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளானார்கள். அவசரத் தேவைகளுக்கு கார் முகப்பு விளக்குகளை இயக்கி சமாளித்தார்கள். போர்க்காயங்களுக்கு இணையாக விபத்துகள் கார்கிவ் மக்களை அதிகம் அச்சுறுத்தின. இந்த நிலையில், ரஷ்யாவின் வேகம் உக்ரைனின் இதர பிராந்தியங்களில் நிலைகொண்டிருப்பதன் மத்தியில், ஓராண்டு கழித்து மீண்டும் கார்கிவ் நகருக்கு மின்சாரம் திரும்பியிருக்கிறது. போரின் துயரங்களுக்கு மத்தியில் இந்த மீள் வெளிச்சத்தை கார்கிவ் நகர மக்கள் கொண்டாடி வருகின்றனர்.