16 வருடங்களுக்கு பிறகு பட்டுக்கோட்டைக்கு ரயில் சேவை: நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

16 வருடங்களுக்கு பிறகு பட்டுக்கோட்டைக்கு ரயில் சேவை: நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பட்டுக்கோட்டை வழித்தடத்தில் ரயில்கள் கடந்த 16 வருடத்திற்கு முன் நிறுத்தப்பட்டன. அதற்குப்பின் அந்த வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டும் இதுவரை ரயில்கள் இயக்கப்படாத நிலையில் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக முதல் முறையாக இன்று ரயில் சேவை தொடங்குகிறது.

தென் மத்திய ரயில்வே சார்பில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வியாழன் காலை சென்னை எழும்பூர் வந்து அங்கிருந்து புறப்பட்டு பட்டுகோட்டை வழியாக வியாழனன்று ராமேஸ்வரம் சென்றடைகிறது. (வண்டி எண் - 07695) . நேற்று (புதன்) இரவு 19.50 மணிக்கு முதன் முறையாக செகந்திராபாத்தில் புறப்பட்ட இந்த ரயில் நல்கொண்டா, குண்டூர், தெனாலி, ஓங்கோல், நெல்லூர், கூடூர் வழியாக இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.

9.45 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 4.50 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக இன்று இரவு 11.40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்று அடைகிறது.

மீண்டும் இந்த ரயில் (வண்டி எண் 07696 ) இதே வழி தடத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் பட்டுக்கோட்டையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. அங்கிருந்து செகந்திரபாத்திற்கு சனிக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் 5, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 10, முதல் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, சரக்கு மற்றும் மேலாளர் பெட்டிகள் 2 ஆக மொத்தம் 21 ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும்.

இந்த ரயில் சேவை ஒவ்வொரு புதன்கிழமையும் செகந்திராபாத்தில் புறப்பட்டு, எழும்பூர், பட்டுக்கோட்டை வழியாக வியாழன் இரவு ராமேஸ்வரத்தை அடையும். மறு மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு சனி இரவு செகந்திராபாத்தை அடையும். 16 வருடங்களுக்கு பிறகு சென்னைக்கு கிடைத்திருக்கும் ரயிலால் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in