ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்: தமிழக -கேரள எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்: தமிழக -கேரள எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக தமிழக -கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் 27-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் இறந்தன. இந்த சூழலில் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து பன்றிகள் கொண்டு வரவும் அதேபோல் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் சோதனைச் சாவடியுடன், பன்றிக்காய்ச்சல் சோதனை சாவடியும் இணைத்து கூடுதல் கால்நடைதுறை நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்புபணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, எல்லைப் பகுதியில் நுழையும் கனரக வாகனங்களில் பன்றிகள், பன்றிகளுக்கான தீவனங்கள் கொண்டு வரப்படுகின்றனவா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் எல்லை சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திற்குள் நுழையும் கால்நடை சம்பந்தப்பட்ட கனரக வாகனங்களுக்கு கிருமிநாசிகள் தெளித்தும் சாலைகளில் பிளீச்சிங் பவுடர் கொட்டியும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும், கேரளாவில் இருந்து பன்றிகள், கோழிகள், பன்றி இறைச்சிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வரும் வாகனங்களை தமிழக எல்லைக்குள் அனுமதிக்காமல் கால்நடைத்துறை அதிகாரிகள் அப்படியே திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in