`எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை'- ஆப்கானிஸ்தான் சீக்கிய கோயிலில் குண்டுவெடிப்பால் பதற்றம்

`எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை'- ஆப்கானிஸ்தான் சீக்கிய கோயிலில் குண்டுவெடிப்பால் பதற்றம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர் கோயில் மீது இன்று காலை துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அப்பகுதியை சேர்ந்த கோர்னம் சிங் என்பவர், "கோயிலுக்குள் சுமார் 30 பேர் இருந்தனர். அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தாலிபான்கள் எங்களை குருத்வாரா உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக தாலிபான் உள்துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "தாக்குதல் நடத்தியவர்கள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை அந்தப் பகுதிக்குள் ஓட்ட முயன்றதில் இருவர் காயமடைந்தனர். அவர்கள் உள்ளே செல்வதற்குள் வாகனம் வெடித்தது. தாலிபான் அதிகாரிகள் அந்த இடத்தைப் பாதுகாத்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் செய்தி சேனல்கள் ஒளிபரப்பிய வீடியோவில், அப்பகுதியில் இருந்து அதிக அளவில் சாம்பல் நிற புகை எழும் காட்சிகள் தெரிகின்றன.

பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மிகச்சிறிய மத சிறுபான்மையினராக உள்ளனர், அங்கு சுமார் 300 சீக்கிய குடும்பங்கள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற மத சிறுபான்மையினரைப் போலவே சீக்கிய சமூகமும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வன்முறைக்கு இலக்காகி வருகிறது. 2020-ல் காபூலில் உள்ள ஒரு சீக்கிய கோயிலில் ஐஎஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், மத்திய அரசு இந்த தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தாக்குதலில் எத்தனைப் பேர் உயிரிழந்தனர், எத்தனைப் பேர் காயமடைந்தனர் என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படாத காரணத்தால் கோயிலுக்கு வழிபாட்டுக்கு சென்ற சீக்கியர்களின் உறவினர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in