`அவரிடம் எப்படி நீதி கிடைக்கும்'- நீதிபதி விக்டோரியா கவுரிக்கு எதிராக வக்கீல்கள், இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்பு; கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற விக்டோரியா கவுரியை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இன்று பொறுப்பேற்ற விக்டோரியா கவுரியின் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றம் வளாகத்தின் வெளியே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சிவக்குமார், ‘’சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் விக்டோரியா கவுரி. உச்ச நீதிமன்ற கொலிஜியம் விக்டோரியா கவுரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்திருப்பது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் எதிராக இருக்கிறது.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்நீதிபதி விக்டோரியா கவுரியை, திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நம்பிக்கை ஏற்படும் வகையில் நீதிபதிகளை பரிந்துரை செய்ய வேண்டும். விக்டோரியா கவுரி போன்றவர்களை நியமித்தால் நீதிமன்றத்தை நாடிவரும் சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகும்’’ என கூறினார்.

இதேபோல உயர்நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள ஆர்மேனியன் தெரு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விக்டோரியா கவுரியின் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக  வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்ட அவரிடம் எப்படி நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும். ஆகவே அவருடைய நியமனத்தை திரும்பப்பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in