கொடி நாட்டிய பாஜக... கோட்டைவிட்ட எதிர்க்கட்சிகள்!

குடியரசுத் தலைவர் தேர்தல்: ஓர் அலசல்
கொடி நாட்டிய பாஜக... கோட்டைவிட்ட எதிர்க்கட்சிகள்!

குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது அதிக அரசியல் சிக்கல்கள் இல்லாத, சம்பிரதாயமான தேர்தல் எனப் பொதுவாக ஒரு பார்வை உண்டு. ஆனால், ஆளுங்கட்சியின் வலிமை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் அமைந்துவிடுவதும் உண்டு.

ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், அப்படியான ஒரு தேர்தல்தான். ஜூலை 21-ல் தான் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றாலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு தான் அடுத்த குடியரசுத் தலைவர் என இப்போதே சொல்லிவிட முடியும். மக்கள் பிரதிநிதிகள் சிலர் மாற்றி வாக்களித்தால் மட்டுமே இதில் மாற்றம் இருக்கும்.

ஆம், மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, மறுக்கவே முடியாத வேட்பாளராக, பழங்குடியினப் பெண் தலைவரான திரெளபதி முர்முவைக் களமிறக்கியிருக்கிறது பாஜக. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்குப் பின்னர் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த திரெளதி முர்முவை முன்னிறுத்தும் பாஜகவின் அரசியல் சாதுரியம் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கவே இலக்கற்று தள்ளாடிய எதிர்க்கட்சிகள், 2024-ல் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து களம் காண என்ன திட்டம் வைத்திருக்கின்றன எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் தடுமாற்றம்

குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க பாஜக, எதிர்க்கட்சிகள் என இரு தரப்பும் மும்முரமாக வேலை செய்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆரம்பம் முதலே இதில் குழப்பங்கள் நிலவின. மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் வேட்பாளராக மம்தா பானர்ஜியால் முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்ட சரத் பவார், அதை மறுதலித்தபோது, ‘தோல்வியடையப்போகும் போரில் சண்டையிட அவர் விரும்பவில்லை’ என்றே தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் காரணம் கூறின. ஃபரூக் அப்துல்லா, கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோரும் ஏறத்தாழ இதே காரணத்தால்தான் பின்வாங்கினர். இன்னும் சொல்லப்போனால் தனது கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா பெயரை மம்தா பானர்ஜி முதலிலேயே முன்மொழியவில்லை.

ஆனால், எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்த பதற்றம் பாஜக தரப்பில் கொஞ்சம்கூட இல்லை. பாஜக சார்பில் ரத்தன் டாடா, சுதா மூர்த்தி, இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் உசைன், ஆரிஃப் முகம்மது கான் போன்றோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. திரெளபதி முர்முவின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. ஜூன் 21-ல் நடந்த பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் திரெளபதி முர்முவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பாஜக தரப்பில் உற்சாகம் ஊற்றெடுத்தது.

அதிகரிக்கும் ஆதரவு

‘மண்ணின் மகள்’ என்பதால், ஆரம்பத்திலேயே திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். அதேபோல, சாதிவாரி கணக்கெடுப்பு, அக்னிபத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதீஷ் குமாரும் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சி, சிரோமணி அகாலி தளம், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்கும் என பாஜகவினர் நம்புகிறார்கள். சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கூட திரெளபதி முர்முவுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, “திரெளபதி முர்மு பொருத்தமான தேர்வு” எனப் பாராட்டியிருக்கிறார். அக்கட்சியும் அவருக்கு ஆதரவளிக்கக்கூடும்.

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களின் ஆதரவும் பாஜக ஆதரவு வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கே கிடைக்கும்.

அடையாள அரசியல்?

இந்தியாவின் மக்கள்தொகையில் 8.6 சதவீதத்தினர் பழங்குடியினர். திரெளபதி முர்முவை முன்னிறுத்துவதன் மூலம் அந்தச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவது மட்டுமல்ல, விளிம்புநிலை சமூகத்தினரை ஆதரிக்கும் கட்சிகள், அந்தச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற விரும்பும் கட்சிகளின் ஆதரவையும் பெற முடியும். அந்த வகையில் பாஜகவின் மிகச் சரியான முன்னெடுப்பு இது.

பழங்குடியினர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் ஜார்க்கண்ட் (26.8 சதவீதம்), சத்தீஸ்கர் (30.6 சதவீதம்) மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு அம்மக்கள் ஆதரவளிக்கவில்லை. பாஜக ஆளும் குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பழங்குடியினரின் வாக்குகள் அக்கட்சிக்குக் குறைவாகவே கிடைத்தன. அந்த மாநிலங்களில் அடுத்து தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில் திரெளபதி முர்முவை பாஜக ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் நாடு முழுவதும் பழங்குடியினச் சமூகத்தின் ஆதரவு முழுமையாக பாஜகவுக்குக் கிடைக்கவில்லை எனச் சொல்ல முடியாது. 2019 மக்களவைத் தேர்தலில் பழங்குடியினச் சமூகத்தினரில் 44 சதவீதத்தினர் பாஜகவுக்கு வாக்களித்ததாக லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் தேசியத் தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அது பழங்குடியினச் சமூகத்திலிருந்து காங்கிரஸுக்குக் கிடைத்த வாக்குகளைவிட 13 சதவீதம் அதிகம்.

2002 பிப்ரவரியில் நடந்த குஜராத் கலவரத்துக்குப் பின்னர், அப்துல் கலாமை தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தி வெற்றிபெறச் செய்தது ஒரு சாதுரியமான காய்நகர்த்தலாக இன்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. மோடி யுகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தும், பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவும் முன்னிறுத்தப்படுவது பாஜகவின் தெளிவான திட்டமிடலைக் காட்டுகின்றன. பழங்குடியினர் மதமாற்றத்துக்காகக் குறிவைக்கப்படுவதாகச் சொல்லி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அந்தச் சமூகத்தினர் மத்தியில் செயல்படுவது உண்டு. அந்த வகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவை முன்னிறுத்துவது பாஜகவுக்குக் கூடுதல் அனுகூலம் தரக்கூடியதுதான்.

முன்னேறிய வகுப்பினர், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கான கட்சி எனும் பாஜகவின் பிம்பம் மாறிவிட்டது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், பெண்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோருக்கான கட்சியாக பாஜக உருவெடுத்துவிட்டது. எளிய குடும்பப் பின்னணி, பழங்குடிச் சமூகம், பெண் என மூன்று அடையாளங்களுடன் முன்னிறுத்தப்படும் திரெளபதி முர்மு பாஜகவுக்கு மேலும் வலு சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அடையாளமும் செயல்பாடும்

எனினும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அவர்கள் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராவதற்கு முந்தைய ஆண்டில் ரோஹித் வெமூலா தற்கொலை, உனாவில் பட்டியலினத்தவர் தாக்கப்பட்ட சம்பவம் போன்றவை நடந்தன. அவர் பதவியேற்ற பின்னரும் அவை தொடர்பான அடுத்தடுத்த நிகழ்வுகள், போராட்டங்கள் தொடர்ந்தன. உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டிலினப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்தன. எனினும், ராம்நாத் கோவிந்த் தரப்பிலிருந்து அந்தச் சம்பவங்கள் குறித்து எதிர்வினைகள் எதுவும் வரவில்லை எனும் விமர்சனங்கள் உண்டு.

திரெளபதி முர்முவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவர் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது ரகுவர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சிக்காலத்தில் அவரது செயல்பாடுகள் பழங்குடியினராலேயே விமர்சிக்கப்படுகின்றன. பழங்குடியினரின் நிலங்களை, பழங்குடியினர் அல்லாதவர் வாங்குவதைத் தடை செய்யும் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் மற்றும் சந்தால் பர்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றில் 2016-ல் திருத்தம் மேற்கொண்டது ரகுவர் தாஸ் அரசு. இதன் மூலம் பழங்குடியினர் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க முடியும் எனும் நிலை உருவானது. இந்தச் சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கும் முடிவில் திரெளபதி முர்மு இருந்தார். பழங்குடிச் சமூகத்தினரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர்தான் அவற்றை அரசுக்குத் திருப்பியனுப்பினார்.

அதேபோல் பழங்குடியினர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட பழங்குடிகள் ஆலோசனைக் குழுவை (டி.ஏ.சி) அமைக்க வழிவகுக்கும் அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை அமல்படுத்த அவர் கடைசிவரை சம்மதிக்கவில்லை. குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னராவது அரசின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் அவர் பணியாற்ற வேண்டும் என்று ஒடிசா பழங்குடியினர் விரும்புகிறார்கள்.

ஸ்கோர் செய்த பாஜக

யஷ்வந்த் சின்ஹாவைப் பொறுத்தவரை, ஜனதா கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, ஜனதா தளத்தில் இணைந்து, பின்னர் பாஜகவில் சேர்ந்து வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராகப் பதவி வகித்தவர். பின்னாட்களில் மோடி - அமித் ஷா இணையின் அரசியல் செல்வாக்கால் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தவர், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனை எதையும் அவர் செய்யவில்லை என்பது அவருக்குப் பின்னடைவைத் தரும் அம்சம். முன்னேறிய சமூகமான பூமிஹார் சமூத்தைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவுக்கு இணையான வலிமை கொண்டவராக இப்போது வரை கருதப்படவில்லை.

மண்ணின் மகள்தான் என்றாலும் இந்துத்துவ கொள்கை கொண்ட திரெளபதி முர்முவுக்கு ஆதரவில்லை என ஒடிசா காங்கிரஸ் பகிரங்கமாகச் சொல்லிவிட்டது. இதனால் அக்கட்சி இழக்கப்போவது ஏதும் இல்லை. ஆனால், மற்ற கட்சிகளுக்கு அப்படியல்ல. சந்தால் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு திரெளபதி முர்முவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் வளையத்தில் இருப்பது தனிக்கதை.

இவ்வளவு ஏன், பாஜகவால் திரெளபதி முர்மு முன்னிறுத்தப்படுவது, மம்தா பானர்ஜிக்கு ஒருவகையில் தர்மசங்கடமான விஷயம்தான். காரணம், மேற்கு வங்கத்திலும் சந்தால் பழங்குடியினர் கணிசமாக வசிக்கிறார்கள். மொத்தத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய சவாலை திரெளபதி முர்முவை முன்வைத்து உருவாக்கியிருக்கிறது பாஜக. எதிர்க்கட்சிகள் என்ன செய்யும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in