அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே நீட் பயிற்சி: அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே நீட் பயிற்சி: அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பை அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2020-2021-ம் கல்வியாண்டு வரை தனியார் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. 2021-2022-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் மட்டும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு தாமதமாகவே பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்நிலையில், நடப்பு ( 2022-23) கல்வியாண்டில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே திறன்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட முறையில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி வகுப்பை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாகவும், அதே வேளையில் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சியும் தொடரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஏதுவாக மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி வகுப்புகள், இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்க உள்ளதாகவும் இதன்மூலம் 7.5% மட்டுமல்லாது பொதுவான இட ஒதுக்கீட்டிலும் அரசுப்பள்ளி மாணவர்களால் சாதிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in