கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி; ஆனால் கூடுதல் பணியிடங்கள் கேட்கக்கூடாதாம்: உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை

கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி; ஆனால் கூடுதல் பணியிடங்கள் கேட்கக்கூடாதாம்: உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதமும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள உயர் கல்வித் துறை அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 3.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தும், 2 லட்சத்து 98 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருந்தனர். கடந்த மாத 3-ம் தேதி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

கடந்தாண்டு 2021-22-ம் கல்வியாண்டில் 25 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கான அரசாணையை உயர் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுக்கு 20 சதவீதமும், அறிவியல் பாடப் பிரிவுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 20 சதவீதம் வரை கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 15 சதவீதம் கூடுதலாகவும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதலாக மாணவ சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்றும், கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in