பொங்கல் பரிசுடன் கரும்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைப்பு

பொங்கல் பரிசுடன் கரும்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைப்பு

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு கோரிக்கையை ஏற்று வழக்கை எதிர்வரும்  திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வந்தது. இந்த ஆண்டு  பொங்கல் பண்டிகைக்கு, ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு, டிசம்பர் 22-ம் தேதி அறிவித்தது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டதாகவும், ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

அதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.  பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிசம்பர் 24-ம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவரது  மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் எஸ்.எஸ்.சௌந்தர் ஆகியோர் முன்பு இன்று  விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன் ஆஜராகி வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (ஜனவரி 2) தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in