விவசாயிகள் திடீர் முடிவு... 'டெல்லி சலோ' போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டம்
விவசாயிகளின் 'டெல்லி சலோ' போராட்டம்

மத்திய அரசு 5ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் 'டெல்லி சலோ' போராட்டத்தை 2 நாட்களுக்கு ஒத்தி வைத்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 13-ம் தேதி முதல் 'டெல்லி சலோ' போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிட பஞ்சாப், ஹரியாணா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான விவசாயிகள் தற்போது டெல்லி மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். தடுப்பு வேலிகள், கம்பி வேலிகள் உள்ளிட்டவற்றை அமைத்து போலீஸார் விவசாயிகளைத் தடுத்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அதையும் மீறி முன்னேற முயலும் விவசாயிகள் மீது, போலீஸார் மற்றும் துணை ராணுவ படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 'டெல்லி சலோ' போராட்டத்திற்காக டிராக்டர்களிலும். ஜேசிபி உள்ளிட்ட கனக இயந்திரங்களிலும் டெல்லி நோக்கி வந்து கொண்டே இருப்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா
மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா

ஏற்கெனவே நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அரசு சார்பில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ஒரு சில வேளாண் பொருட்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க அரசு முன் வந்தது. ஆனால் இதனை விவசாயிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாகவும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐந்தாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு வருமாறு அரசு சார்பில் வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, நான்காம் கட்டப் பேச்சு வார்த்தைகளில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கலாம் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசின் இந்த கோரிக்கையை ஏற்று டெல்லி சலோ போராட்டத்தை 2 நாட்களுக்கு ஒத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த முயல்வதே தங்களது நோக்கம் எனவும், அதனை நோக்கிய முன்னெடுப்பாக இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என நம்புவதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in