ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியின் அருகே இன்று நிலைநிறுத்தப்படும்... இஸ்ரோ அறிவிப்பு!

ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியின் அருகே இன்று நிலைநிறுத்தப்படும்... இஸ்ரோ அறிவிப்பு!

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா விண்கலம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 புள்ளிக்கு மிக அருகே இன்று மாலை நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது. இதில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும்ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.

இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, 127 நாட்கள் பல்வேறுகட்ட தடைகளைக் கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வரும் ஆதித்யா விண்கலம், தற்போது எல்-1 புள்ளிக்கு அருகே உள்ளது. தொடர்ந்து எல்-1புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்தபடியே இதற்கான முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிந்த பின்னர், எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்யும். சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. எரிபொருள் இருப்பைப் பொறுத்து இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

சூரியன் ஆதித்யா விண்கலம்
சூரியன் ஆதித்யா விண்கலம்

இதில் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆராய 7 வகையான சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 4 கருவிகள் சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டு, நேரடியாக கண்காணித்து தகவல்களை வழங்கும். மீதமுள்ள கருவிகள் சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால், அதன் புறவெளியில் உருவாகும் மாற்றங்களை, எல்-1 பகுதியில் உள்ள துகள்களை ஆராய்ந்து கணிக்கும்.

இதற்கிடையே, விண்கலம் பயணிக்கும்போதே ஆதித்யாவில் உள்ள ஹெல்1ஒஎஸ், ஏபெக்ஸ்,சூட் ஆகிய சாதனங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in