தூணிலும், துரும்பிலும் மட்டுமல்ல எல்லா வீடுகளிலும் இருக்கிறார் ஆதிகேசவ பெருமாள்!

பக்தர் 'பட்டாளத்துப் பாட்டா'வின் பரவச அனுபவம்
தூணிலும், துரும்பிலும் மட்டுமல்ல எல்லா வீடுகளிலும் இருக்கிறார் ஆதிகேசவ பெருமாள்!

108 வைணவத் தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளுக்கு சேவை செய்வதே தான் பெற்ற பெரும்பேறு என தன் வாழ்வைத் தகவமைத்துக் கொண்டவர்கள் பலர். அதில் முதன்மையானவர் சுகுமாறன். திருவட்டாறு மக்களுக்கோ இவர் ‘பட்டாளத்துப் பாட்டா’. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சதா சர்வநேரமும் ஆதிகேசவன் சேவையே தன் வாழ்வின் தவம் என வாழ்ந்துவரும் திருவட்டாறு சுகுமாறனிடம் பேசினோம்.

ஆலய கருவறை வெளிப்புறத் தோற்றம்
ஆலய கருவறை வெளிப்புறத் தோற்றம்

“எனக்கு 80 வயது ஆகிறது. என் அப்பா கிருஷ்ணபிள்ளை இந்தக் கோயிலில் காவலாளியாக இருந்தார். அப்பாவுக்கு அப்போது தினமும் நான்கரைக் கட்டிச் சோறும், மாதம் நாற்பது ரூபாயும் தான் ஊதியம். ஐடிஐ படித்துவிட்டு பட்டாளத்தில் வேலைக்குப் போய்விட்டேன். ஆதிகேசவப் பெருமாள் கோயில் கட்டிச்சோற்றைச் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு இது. இதனாலேயே ஆதிகேசவனின் சேவையிலேயே லயித்துப் போகிறேன்.

எங்கள் பகுதிமக்களின் நல்லது, கெட்டது அத்தனையிலும் ஆதி கேசவன் உண்டு. இறைவன் தூணிலும், துரும்பிலும் மட்டுமல்ல. இந்த ஆதிகேசவன் எங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருப்பார். இந்த ஊரில் குடும்பத்தில் ஒருவருக்காவது கேசவன், ஆதி கேசவன் என பெயர் இருக்கும். இந்த ஊரில் கேசவன் குட்டி, கேசவன் பெருமாள், மாதவன், கேசவன் என நிறையபேருக்கு பெயர் உண்டு. இந்தக் கோயிலை முன்பு செண்பக வனம், சேரநாட்டு வைகுண்டம், கதளிவனம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் கோயிலில் ஆதிகேசவப் பெருமாள் தெற்கு, வடக்காக படுத்திருக்கிறார். நான்கு திசைகளிலும் வாசல் இருந்தாலும் அவர் படுத்திருக்கும் திசை வாசல்களை அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் திறப்பதில்லை. கிழக்கு, மேற்கு வாசல்களே திறக்கப்படும் ”என்று முன்னுரை கொடுத்தார்.

திருவட்டாறு சுகுமாறன்
திருவட்டாறு சுகுமாறன்

வட்டாறு...திருவட்டாறு ஆனது!

இந்த ஊருக்குத் திருவட்டாறு என பெயர் வந்ததன் பின்னாலேயே ஒரு சுவாரஸ்யமான பூலோக அமைப்பு இருக்கிறது. அதைப்பற்றியும் நம்மிடம் தொடர்ந்து பேசிய சுகுமாறன், “பரளியாறும், கோதையாறும் இந்த ஊரில் வட்ட வடிவில் சுற்றி, ஆறாக ஓடியதால் வட்டாறு எனச் சொன்னார்கள். காலப்போக்கில் இது திருவட்டாறு ஆனது. ஆதிதாமபுரம் என்றும் இந்த ஊர் தொடக்ககாலத்தில் அழைக்கப்பட்டது. வேணாடு, திருவிதாங்கூர், திருகொச்சி, கேரளம், இப்போது தமிழகம் என பல ஆட்சியாளர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஆதிகேசவன். 1729 வரை திருவிதாங்கூர் மன்னர்கள் இப்போதைய குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்துதான் ஆட்சிசெய்தார்கள். அவர்கள் காலத்தில் இந்த ஆலயம் மிகவும் சிறப்புடன் இருந்தது. டச்சுப்படையை குளச்சல் போரில், திருவிதாங்கூர்படை வீழ்த்திய போதும் திருவட்டாறு ஆலயத்தில் தங்கள் உடைவாளை வைத்து வணங்கினர். அந்த வெற்றியைத் தந்தமைக்காக 900 பணம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

மலைநாட்டுத் திருப்பதியில் வரும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நாமம் இடும் கலாச்சாரம் கிடையாது. நெற்றியில் சந்தனக்குறிதான் பூசுவார்கள். திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளை வணங்குகிறவர்களுக்கு, அவரையே நினைத்து உருகுபவர்களுக்கு கடுமையான சோதனைகளை முதலில் கொடுப்பார். அதை தாக்குப்பிடித்து நின்று, அவர் சோதனையைத் தாங்கிவிட்டால் நாமே நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் கொண்டுபோய் நிறுத்துவார். திவ்ய தேசம் என்றாலே இறைவன் வந்து உறைகின்ற இடம் என்று அர்த்தம். 108 வைணவத் தலங்களில் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் 76 வது இடத்தில் உள்ளது. இந்தக் கோயிலில் செண்பக மரம் தலவிருட்சமாக உள்ளது ”என தினமும் தான் தரிசிப்பதோடு மட்டுமல்லாமல், தன்னால் முடிந்த பணிகளையும் ஆலயத்தில் உடல் உழைப்பாக வழங்கிக்கொண்டிருக்கும் சுகுமாறன் பட்டியலிடுகிறார்.

திருமணத்தடை நீக்குவார்!

தொடர்ந்து பேசிய சுகுமாறன், “மிகவும் புண்ணிய நதியாக போற்றப்படும் கங்கை நதி அலகாபாத்தில் தெற்கு, வடக்காக ஓடுகிறது. அதேபோல், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளின் பரளியாறு தெற்கு, வடக்காக ஓடுகிறது. இங்கே நீராடிவிட்டு ஆதிகேசவப் பெருமாளை வணங்குவது பெரும்பாக்கியம். காவிரி ஆற்றங்கரையில் பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீரங்கநாதன் தெற்கு தரிசனம். ஆனால், அவர் 16 அடி நீளம்தான். திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் 22 அடி நீளம். மேற்கு தரிசனம்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளை திருமணம் நடக்காதவர்கள் தொடர்ந்து வழிபட்டால் திருமணத்தடை அகற்றுவார். ஏழு அர்ச்சனைகள் இங்கே குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்தால் திருமணத்தடை அகன்று வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். இதற்கென்றே மாங்கல்ய பூஜை என்றே பிரத்யேக அர்ச்சனை இருக்கிறது. அதேபோல், மகப்பேறு இல்லாதவர்கள் மனம் உருக வேண்டினால் பிள்ளைப்பேறு கிடைக்கும். அவர்கள் சந்தான கோபால அர்ச்சனை இந்த ஆலயத்தில் செய்தால் குழந்தைச் செல்வம் கிடைக்கும். இதேபோல் பாம்பினால்(சர்பம்) தோசம் இருப்பவர்களும் இங்கேவந்து வழிபட்டால் சர்ப்ப தோஷம் நீக்கும். இங்கு பெருமாள் சர்ப்பத்தின் மீது அல்லவா பள்ளிகொண்டிருக்கிறார்? தன் பக்தர்களின் அந்த தோஷத்தையும் போக்கிவிடுவார். இங்குவந்து சுதர்சன அர்ச்சனை செய்தால் வாழ்வில் முன்னேற்றத்திற்கு இருக்கும் தடைகள் நீங்கிவிடும் ”என்று தான் சேவகம் செய்யும் ஆதிகேசவப் பெருமாள் குறித்து விழிகள் விரிக்க விவரிக்கிறார் சுகுமாறன்.

ஒருநிமிடம் என்றவாறே, ஆதிகேசவப் பெருமாள் இருக்கும் திசைநோக்கி வணங்கிவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். “108 வைணவத் தலங்களில் மிகவும் அழகான பெருமாளும் இவர் தான். தெற்கு, வடக்காக இங்கே கருவறையில் ஆதிகேசவப் பெருமாள் இருக்கிறார். அதேபோல், வழக்கமாக சயன நிலையில் இருக்கும் மகா விஷ்ணுவைக் கும்பிட வேண்டுமென்றால் முதலில் பாதத்தைக் கும்பிடவேண்டும். தொடர்ந்து மத்திக்கு வந்துதான், தலைப்பகுதியை வணங்கமுடியும். ஆனால் இங்கே முதலில் தலைப்பகுதியை வணங்கிவிட்டு, உடலைக் கும்பிட்டு, பாதத்தை கடைசியாகத்தான் தரிசிக்கமுடியும். கருவறையில் ஆதிகேசவப் பெருமாளின் பாதத்தில் ஹாதலேய முனிவர் இறைவனை வணங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்பதாலேயே முதலில் பாதத்தை வணங்காமல் தலையை வணங்கும் மரபு இங்கே வந்தது.

ஆதிகேசவனும், திரு அல்லாவும்!

இதேபோல் இந்த கோயிலில் திரு அல்லா என ஒரு மண்டபம் உள்ளது. அது பேச்சுவழக்கில் இன்று திருவல்லா ஆகிவிட்டது. இதை ஆற்காடு நவாப் கட்டிக்கொடுத்தார். இந்தக் கோயிலில் அதற்கு முன்பு ஒரு திருட்டுச் சம்பவம் நடந்தது. 1740-ம் ஆண்டு செங்கிஸ்கான் என்னும் முகலாய மன்னர் திருவட்டாறு கோயிலைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அப்போது கோயிலில் இருந்த உற்சவமூர்த்தியை எடுத்துச்சென்று ஆற்காட்டில் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டார். இதனிடையே ராணிக்குத் தீராத நோய், நாட்டில் பலகுழப்பங்களும் நிகழ திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து எடுத்த உற்சவரைத் திரும்பிவைக்க வந்தார் ஆற்காடு நவாப்.

கோயிலைச் சுற்றி ஓடும் ஆற்றில் குளித்துவிட்டு விக்கிரகத்தை அங்கிருந்து எடுத்தபோது அதை அசைக்கக்கூட முடியவில்லை. அப்போது, ‘ஐப்பசி மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம்வரை திருவிழா நடத்த வேண்டும். திருவோணம் நட்சத்திரம் அன்று ஆற்றில் ஆறாட்டு நடத்தி கோயிலுக்கு என்னை அழைத்துவர வேண்டும்.’’எனவும் அசரீரி ஒலித்திருக்கிறது.

உற்சவரைக் கவர்ந்து சென்று, தான் செய்த தவறுக்கு பரிகாரமாகத்தான் ஆற்காடு நவாப் திருவல்லா மண்டபத்தைக் கட்டிக்கொடுத்தார். இஸ்லாமிய மன்னர் கட்டிக்கொடுத்ததால் அந்தப்பகுதியின் அமைப்பே பள்ளிவாசலின் தன்மையோடு இருக்கும். வருடத்திற்கு 20 நாள்கள் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடக்கும். அப்போது வாகனத்தில் சுவாமி சுற்றிவிட்டு வந்ததும், இந்த திரு அல்லா மண்டபத்தில் தான் வந்து இறக்குவார்கள். சுவாமிக்கு அவல் நைவேத்தியம் அப்போது, அந்த மண்பத்தில் வைத்தே கொடுக்கப்படும். இந்த பூஜைக்கே திருஅல்லா பூஜை என்றே பெயர். அந்தவகையில் சமயநல்லிணக்கத்திற்கும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் உதாரணமாக உள்ளார் ”என்று நெகிழ்ச்சியோடு பகிர்கிறார் இந்த பட்டாளத்துப் பாட்டா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in