
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி முன் தேசப்பற்று குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றிய கீழக்கரை கல்லூரி மாணவிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள நேரு யுவ கேந்திரா சங்கதன், 18 வயது முதல் 24 வயது வரையிலான இளையோருக்கு தேசிய ஒருமைப்பாடு, தலைமைப்பண்பு தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறது. தகுதியானோரை தேசிய சேவைப்பணியாளர் பணிக்கு தேர்வு செய்கிறது.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடம் நன்னெறியைப் போதிக்கும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட கலைப்போட்டிகள் நடத்தி அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் நடந்த பேச்சுப் போட்டியில் கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி பி.எஸ்சி சைபர் செக்யூரிட்டி சிஸ்டம் பாடப்பிரிவு 2-ம் ஆண்டு மாணவி ஆயிஷத் ருக்சனா கலந்து கொண்டார்.
இதில் வெற்றி பெற்ற இவர் மாநில, தேசிய அளவிலான போட்டியில் வென்றார். இதனடிப்படையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் மாணவப் பிரதிநிதியாக தேர்வான ஆயிஷத் ருக்சனா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசும் வாய்ப்பு பெற்றார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உங்கள் தலைவர்களை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பிலான உரையாடல் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் மாணவி ஆயிஷத் ருக்சனா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தேசப்பற்று குறித்து பேசி பிரதமரின் பாராட்டைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மாணவி ஆயிஷத் ருக்சனாவிற்கு நாட்டின் பல்வேறு நகரங்கள் மட்டுமின்றி வளைகுடா நாடுகளில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.