
``குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாயவிலை கடை மற்றும் சீர்காழி நகர கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் மாநில கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள செங்கரும்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பொழுது விவசாயிகள் அவர்களிடம் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம். எனவே கூடுதல் விலைக்கு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனை கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அப்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள செங்கரும்பை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகையுடன் முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசே கரும்பை கொள்முதல் செய்யும்" எனத் தெரிவித்தார்.